வெற்றிப்பயணம் பேருந்தில் பெண்களை மதிப்பதே இல்லை

ராமேஸ்வரம், அக். 23-
ராமேஸ்வரத்தில் பெண் ஒருவர், வெற்றிப்பயணம் பேருந்து குறித்து ஆதங்கத்துடன் பேசும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில், வாரத்தில் ஒரு நாள் செவ்வாய்க்கிழமையன்று வாரச்சந்தை நடைபெறும். அன்றைய தினம், பொருட்கள் வாங்குவதற்காக சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பெண்கள், பேருந்துகளில் பயணம் செய்து சந்தைக்கு வருவது வழக்கம்.
வாரச்சந்தையில் பொருட்களை வாங்குவதற்காக பெண்கள் சிலர், கோயில் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் நேற்றுமுன்தினம் பஸ்சுக்காக காத்திருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த தமிழக அரசின் பெண்களுக்கு கட்டணம் இல்லாத வெற்றிப் பயண பேருந்து, பஸ் ஸ்டாப்பில் நிற்காமல் சென்றது. இதனால் பஸ் ஸ்டாப்பில் நின்றிருந்த பெண்கள் கடும் அதிருப்தியடைந்தனர். இதில், மனவேதனை அடைந்த பெண் ஒருவர், ரூ.100 செலவு செய்து ஆட்டோவில் பேருந்து நிலையம் வந்துள்ளார்.
அங்கு வெற்றிப் பயண பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மற்றும் கண்காணிப்பாளரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது அவர், ‘’பஸ்சுக்கு பின்னாடியே ஓடி வர்றேன். என்ன நடத்துறாங்க? பெண்களை பெண்களா மதிக்கிறது இல்ல. ஆட்டோ பிடிச்சு வந்துருக்கேன். இலவசத்த கேட்டோமா நாங்க? இலவசத்தை யாரு கேட்டது? இதுக்கு முதலமைச்சருக்குத்தான் பெட்டிஷன் போடணும்.
காலைல 9 மணிக்கு போயிட்டு சாயங்காலம் 6 மணிக்கு வாரோம் வேலை பார்த்துட்டு. சாயந்தரம் வீட்டுக்கு போறோம். இந்த இலவசம் எதுக்கு? இலவசம்லாம் வேண்டாம். டிக்கெட் வாங்கி ஏறிக்கிறோம். யார் கேட்டா இந்த இலவச பஸ்ஸ..’’ என கோபமாக தனது மனக்குமுறலை வெளிப்படுத்தினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *