திருப்பரங்குன்றம் உச்சி பிள்ளையார் கோவிலில் வழக்கம் போல் தீபம் ஏற்றப்பட்டது

மதுரை, நவ. 25-
மதுரை, திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள உச்சிப் பிள்ளையார் கோயிலில் அண்மைக்கால நடைமுறைப்படி தீபம் ஏற்ற கொப்பரை எடுத்துச் செல்லப்பட்டது.
திருப்பரங்குன்றம் கோவிலில் இருந்து, உச்சிப் பிள்ளையார் கோவிலில் தீபம் ஏற்றுவதற்கு தாமிர கொப்பரை எடுத்துச் செல்லப்பட்டது. திருப்பரங்குன்றம் மலையில் உள்ள உச்சிப் பிள்ளையார் கோவில் அருகே வழக்கமான இடத்தில் நேற்று மாலை கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.
தீபம் ஏற்றுவதற்கான தாமிரக் கொப்பரை, 40 டின் நெய், 150மீட்டர் காடா துணி , 5kg கற்பூரம் உள்ளிட்ட பொருட்களை கோவில் பணியாளர்கள் எடுத்துச்சென்றனர். மேலும், திரிகளின் உள்ளே வைப்பதற்காக மண் கலயங்கள் கட்டுக் கம்பிகள் எடுத்துச் செல்லப்பட்டன.
உச்ச நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றும் வகையில், திருப்பரங்குன்றம் தீபத்தூணில் இன்று தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் ஏதும் வெளிப்படையாக செய்யப்படவில்லை.
முன்னதாக, கடந்த நவ.20 அன்று திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை மகா தீபம் ஏற்றவேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மறு சீராய்வு மனு செய்துள்ளதால் திருப்பரங்குன்றம் மலையில் தீபத்தூணில் தீபம் ஏற்றப்படுமா, அல்லது கடந்த ஆண்டுகளைப் போலவே உச்சிப் பிள்ளையார் கோயில் மண்டபத்தில் மட்டும் ஏற்றிவிட்டுச் சென்றுவிடுவார்களா? இந்த வருடமாவது தீபத் தூணில் தீபம் ஏற்றுவதை தரிசிக்க முடியுமா என பக்தர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
எனினும் நேற்று இரவு வரை தீபத்தூணைச் சுற்றிலும் மூங்கில் தடுப்புகள் எதுவும் அமைக்கப்படவில்லை. எந்த வித முன்னேற்பாடுகளும் இன்று வரை செய்யப்படவில்லை. ஆனால், கடந்த வருடம் போலவே 144 தடை உத்தரவு போட்டு கடுமையான காவல் பணிகளைச் செய்திருக்கிறது.
இது குறித்து திருப்பரங்குன்றம் மலை அடிவாரத்தில் வசிக்கும் மக்கள் கூறியபோது, பல ஆண்டுகளுக்குப் பின்பு தீபத்தை தரிசிக்க ஆவலாக உள்ளோம். இழந்த பெருமையை மீட்டுள்ளோம். நூற்றாண்டு கனவு நிறைவேறும் என நம்புகிறோம். இனி யாரும் தீபத்தூணை சர்வே கல் என்று கூறாதீர்கள்; முருகனின் சாபம் பலித்து விடும். முந்தைய திமுக அரசு செய்ததையே தவெக அரசும் செய்யக் கூடாது. மக்களின் ஆன்மிக உணர்வுகளைப் புரிந்து கொள்ள வேண்டும். கடந்த ஆண்டு இதற்காக பொதுமக்களை மிகுந்த துன்பத்துக்கு ஆளாக்கினர். இருபதுக்கு மேற்பட்ட பெண்கள் கைது செய்யப்பட்டனர். ஐந்து நாட்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியவில்லை. தெருக்களில் தடுப்புகள் வைத்து மறித்தனர். பள்ளிகளுக்குக்கூட குழந்தைகள் செல்ல முடியவில்லை. பால் வாங்க கடைக்குக் கூட செல்ல முடியாமல் தடை விதித்தனர். கடந்த ஆண்டைப் போலவே இப்போதும் நடப்பது அச்சத்தை ஏற்படுத்துகிறது என்றனர்.
மதுரை, திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள உச்சிப் பிள்ளையார் கோயிலில் அண்மைக்கால நடைமுறைப்படி தீபம் ஏற்ற கொப்பரை எடுத்துச் செல்லப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *