மதுரை, நவ. 20-
மதுரை நகரில் ரேஸ் கோர்ஸ் சாலையில் எப்போதும் பரபரப்பாக காணப்படும். அப்பகுதியில் தல்லாகுளம் காவல் நிலையம் , மாவட்ட நீதிமன்றம், மாநகராட்சி மண்டல அலுவலகம், விளையாட்டுதிடல் உள்ளது. இங்கு தினமும் பொதுமக்கள் நடை பயிற்சி மேற்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இந்த சாலையில் இளைஞர்கள் அவ்வப்போது பைக் ரேசில் ஈடுபடுவதால் அப்பகுதிக்கு செல்லும் போது பொதுமக்கள் ஒருவித அச்சத்துடன் செல்கின்றனர். இந்நிலையில் மாவட்ட நீதிமன்றம் அருகேயுள்ள ரேஸ்கோர்ஸ் சாலையில் 2 இளம் பெண்கள் ஹெல்மெட் அணியாமல் பைக் ரேசில் ஈடுபடுவது போன்ற காட்சிகளை தங்களது இன்ஸ்டா பக்கத்தில் ரீல்ஸாக பதிவிட்டுள்ளனர்.
அதில் சாணம் புடிச்ச கத்தி உன்ன போட்டுடுவென் வெட்டி என் ஸ்டோரிய நீ கேளு நான் மோசமான ஆளு ! உன்னைய சாவடிச்சா இன்னைக்கே பால் என்ற கானா பாடலோடு சிட்டாக பறந்த ரெட்டை குருவிகள் போல பைக் ரேஸ் சென்ற இளம்பெண்களின் ரீல்ஸ் சமூகவலை
தளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்து காவல்துறை நடவடிக்கை எடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மதுரை மாநகர பகுதிகளில் வாகன தணிக்கையில் ஈடுபடும் காவல்துறையினர் சாலைகளில் செல்லக்கூடிய தொழிலாளர்கள் பணியாளர்களின் வாகனங்களை சோதனைக்கு உட்படுத்தும் நிலையில் மாநகரின் பிரதான பகுதிகளில் இதுபோன்று பைக் ரேஸில் ஈடுபடக்கூடிய நபர்களைப் பிடித்து அவர்களுடைய வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும். இது போன்ற பைக் ரேஸர்களால் பொதுமக்களின் உயிருக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளதாக கூறி வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் கோவை சிங்காநல்லூர் பகுதியில் ஹெட்போனை மாட்டிக் கொண்டு பாட்டைக் கேட்டபடியே இருசக்கர வாகனத்தில் நடனமாடிச் சென்ற இளம்பெண்ணின் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.
மதுரை நகரில் கானா பாட்டுப் போட்டு பைக் ரேஸ்: எல்லை மீறும் இளம்பெண்கள்
