பெரியாறு, வைகையில் மோட்டார் மூலம் தண்ணீர் திருட்டு:மின் இணைப்புகளை ரத்து செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்

மதுரை, நவ. 13-
முல்லை பெரியாறு அணையிலிருந்து வைகை அணை வரை மின் மோட்டார்கள் மூலம் 250 கனஅடி தண்ணீர், வைகை அணையிலிருந்து பேரணை வரை 100 கனஅடி தண்ணீர் திருடுவோரின் மின் இணைப்புகளை ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி
னர்.
மதுரை தல்லாகுளம் நீர்வளத் துறை மண்டல தலைமை அலுவலகத்தில் பெரியாறு வைகை வடிநில வட்ட கண்காணிப்பு பொறியாளர் சாம் இர்வின் தலைமையில், கோட்ட செயற்பொறியாளர் சிவபிரபாகர் முன்னிலையில் 2010 அரசாணையில் திருத்தம் செய்வது தொடர்பாகவும், இருபோக பாசனப் பகுதிகளுக்கு தண்ணீர் திறப்பது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், கம்பம் பள்ளத்தாக்கு, முல்லை பெரியாறு ஒருபோகம் மற்றும் இருபோக பாசன விவசாய சங்க நிர்வாகிகள், கள்ளந்திரி, மேலூர் பகுதி விவசாயிகள் பங்கேற்று தங்கள் கருத்துகளை தெரிவித்தனர்.
இக்கூட்டத்தில், முல்லை பெரியாறு அணையிலிருந்து வைகை அணை வரை ஆற்றங்கரையோரங்களில் மின் மோட்டார்கள், ஆயில் இன்ஜின்கள் மூலம் சுமார் 250 கனஅடி தண்ணீர் திருடப்படுகிறது.
அதேபோல் வைகை அணையிலிருந்து பேரணை வரை சுமார் 100 கனஅடி தண்ணீர் திருடப்படுகிறது. இதனால் பாசனப் பகுதிகளில் தண்ணீரின்றி விவசாயம் பெருமளவு பாதிக்கிறது.
அரசியல் பிரமுகர்களின் பினாமிகளே தண்ணீர் திருட்டில் ஈடுபடுவதால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க தயங்குகின்றனர். எனவே தமிழக அரசு பாரபட்சமின்றி தண்ணீர் திருட்டில் ஈடுபடுவோரின் மின் இணைப்புகளை ரத்து செய்வதோடு, மின்மோட்டார்கள், ஆயில் இன்ஜின்கள், பம்ப்செட், குழாய்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *