திருச்சி, அக். 28-
திருச்சியில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அளித்த பேட்டி: டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இவ்வளவு தான் இருக்க வேண்டும் என கூறும் நிலை தற்போது இல்லை, தானாக அது தன்னுடைய இயற்கை நிலையை அடையும். தற்போது ரிசர்வ் வங்கி அதை திடீரென மாறும் சூழல் ஏற்படாத வகையில் நடவடிக்கை முயற்சி எடுத்து வருகிறது. ஆனால் ரிசர்வ் வங்கியே இங்கே ரூபாயின் மதிப்பு எவ்வளவு தான் இருக்க வேண்டும் என எந்த முடிவும் செய்வது இல்லை.
தமிழ்நாடு அரசு கடன் வாங்குவது தொடர்பாக தமிழக சட்டமன்றத்தில் விரிவாக விவாதிக்கப்பட வேண்டிய விஷயம். ஒன்றிய அமைச்சராக இருக்கக்கூடிய நான் ஒரு மாநிலத்தின் நிலை குறித்து பேசுவது சரியாக இருக்காது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த சில அமைச்சர்கள் இருக்கிறார்கள். 2014 முதல் விலைவாசி உயராமல் இருக்க விநியோக முறையை சரியாக நிர்வகிக்க ஒன்றிய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அதனால் அரிசி ஏற்றுமதி நிறுத்தப்பட்டது. விவசாயிகளுக்கு குறைந்தபட்ச லாபகரமான விலை தருவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.
2030க்குள் இந்தியாவின் ஜிடிபியில் 50% தான் கடன் இருக்கும். அதற்கான முயற்சியை எடுத்து வருகிறோம். கடன் குறித்தான உங்கள் கவலை நியாயமானது. ஆனால் கடன் குறைந்து கொண்டே தான் வருகிறது. தனி நபர் வருவாயை உயர்த்துவதற்கான முயற்சிகள் பலவிதமாக நடந்து வருகிறது. ஆனால், இதற்கிடையே கொரோனா, சில நாடுகளுக்கு இடையேயான போர், கச்சா எண்ணெய் விலை உயர்வு உள்ளது. இந்த சுமை மக்கள் மீது விழாமல் இருப்பதற்கான முயற்சிகளையும் தொடர்ந்து அரசு எடுத்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
தமிழக அரசு அதிகமாக கடன் வாங்குவது பற்றி பேரவையில் விவாதிக்க வேண்டும்மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி
