சென்னை, அக். 28-
சென்னை விமான நிலையத்தில் இருந்து உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான சேவைகளை அதிகரிக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, விமான எரிபொருளான ஏவியேஷன் டர்பைன் ஃபியூல் மீதான மதிப்பு கூட்டு வரியை 29 சதவீதத்தில் இருந்து 16 சதவீதமாக தமிழக அரசு குறைத்துள்ளது. இதையடுத்து, சென்னையில் இருந்து கூடுதல் விமானங்களை இயக்கவும், புதிய இடங்களுக்கு விமான சேவைகளை விரிவுபடுத்தவும் விமான நிறுவனங்கள் ஒப்புக்கொண்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும், கூடுதல் விமானங்கள் எப்போது இயக்கப்படும் என்பது குறித்து நிறுவனங்கள் இதுவரை குறிப்பிட்ட காலக்கெடுவை வழங்கவில்லை.
சென்னை விமான நிலையத்தின் இணைப்புத் திறனை மேம்படுத்தும் நோக்கில், தமிழக அரசு பல்வேறு விமான நிறுவனங்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. தமிழக அரசு, இந்திய விமான நிலையங்கள் ஆணையம் மற்றும் விமான நிறுவனங்களுக்கு இடையே அண்மைக்காலமாகப் பல்வேறு ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்றுள்ளன. அப்போது, சென்னையில் இருந்து அதிக இடங்களுக்கு விமானங்களை இயக்கவும், ஏற்கெனவே உள்ள வழித்தடங்களில் சேவைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் அரசு வலியுறுத்தியது. ஆனால், விமான எரிபொருள் மீதான அதிகப்படியான வரி தங்களின் செயல்பாட்டுச் செலவுகளை அதிகரிப்பதாக விமான நிறுவனங்கள் தொடர்ந்து சுட்டிக்காட்டி வந்தன.
விமான நிறுவனங்களின் மொத்த இயக்கச் செலவில் விமான எரிபொருள் முக்கியப் பங்கு வகிக்கிறது. எனவே, ஏடிஎஃப் மீதான வரியைக் குறைக்க வேண்டும் என்று விமான நிறுவனங்கள் மட்டுமின்றி, இந்திய விமான நிலையங்கள் ஆணையம் மற்றும் மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகமும் வலியுறுத்தி வந்தன. இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் ஏடிஎஃப் மீதான வாட் வரியை 29 சதவீதத்தில் இருந்து 16 சதவீதமாகக் குறைத்த தமிழக அரசின் அறிவிப்புக்கு விமான நிறுவனங்கள் வரவேற்பு தெரிவித்துள்ளன.
இதன் தொடர்ச்சியாக, சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகளை விரிவுபடுத்துவதாக நிறுவனங்கள் உறுதியளித்துள்ளன. சென்னையில் செயல்படும் மிகப்பெரிய விமான நிறுவனங்களில் ஒன்று தனது விமான சேவைகளை ஏறத்தாழ 25 சதவீதம் அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும், மற்றொரு முக்கிய நிறுவனம் 8 சதவீதம் அளவுக்கு சேவைகளை உயர்த்துவதாகத் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், சென்னையில் இருந்து ஜப்பானுக்கு நேரடி விமான சேவையைத் தொடங்குமாறு ஒரு விமான நிறுவனத்திடம் தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
இண்டிகோ, ஏர் இந்தியா, ஆகாசா ஏர் உள்ளிட்ட நிறுவனங்களும் வரிக் குறைப்பை வரவேற்றுள்ளன. எனினும், கூடுதல் விமானங்களை இயக்குவதற்கான கால அட்டவணை இன்னும் உறுதி செய்யப்படவில்லை. குறிப்பாக, உடனடியாக விமானங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்க முடியாது என்றும், கோடைக்கால விமான அட்டவணையில் இதன் தாக்கம் தெரியவரலாம் என்றும் கூறப்படுகிறது.
சென்னையில் விமான சேவைகளை அதிகரிப்பதற்கு வரிக் குறைப்பு மட்டுமின்றி, உயர்மதிப்புள்ள வேலைவாய்ப்புகளை உருவாக்கி விமானப் பயணங்களுக்கான தேவையை அதிகரிப்பதும் அவசியம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய தொழில் முதலீடுகள் மற்றும் வேலைவாய்ப்புகள் அதிகரித்தால், உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானப் போக்குவரத்தும் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தகவல்கள் ‘தி இந்து’ வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளது.
‘வரியை குறைத்தோம்: விமான சேவையை விரிவுபடுத்த வேண்டும்விமான நிறுவனங்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தல்
