ஈரோடு, அக். 23-
வெள்ளாளபாளையம் பகுதியில் ஈரோடு ஆட்சியர் கந்தசாமி சென்ற கார் மோதியதில் சண்முகம் (50) என்பவர் உயிரிழந்தார்.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, இன்று சத்தியமங்கலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது காரில் ஈரோடு நோக்கிச் சென்று கொண்டிருந்தார். கோபி அருகே உள்ள வெள்ளாளபாளையம் பகுதியில், வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அருகே நான்கு வழிச் சாலையில் அவர் சென்று கொண்டிருந்தபோது, அந்த வழியில் கார் வருவதைக் கவனிக்காமல் வெள்ளாங்கோயிலைச் சேர்ந்த விவசாயி சண்முகம் என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் சாலையைக் கடக்க முயன்றார்.
இருசக்கர வாகனம் ஒன்று திடீரென சாலையைக் கடந்ததால், மாவட்ட ஆட்சியரின் காரை நிறுத்த முடியாமல் அதன் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட விவசாயி சண்முகம் என்பவர் படுகாயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு அருகே ஆட்சியர் கார் மோதியதில் விவசாயி உயிரிழப்பு
