சென்னை, அக். 22-
ரசிகர் மன்றத்தை நற்பணி இயக்கமாக மாற்றிய கையோடு டெல்லி சென்ற நடிகர் தனுஷ், அடுத்த கட்டமாக நற்பணி இயக்க மகளிர் நிர்வாகிகளை சந்திக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
2031-ஐ இலக்காக வைத்து நடிகர் தனுஷ் காய்களை நகர்த்தி வருவதாக கூறப்படும் நிலையில் அவரது அடுத்த திட்டம் என்ன? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
தமிழ்நாட்டு அரசியலில் சினிமா நட்சத்திரங்களின் பங்களிப்பு என்பது மிக நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. எம்ஜிஆர் தொடங்கி தற்போது முதலமைச்சராக உள்ள விஜய் வரை சினிமா பின்புலத்துடன் வந்து ஆட்சியை பிடித்த காட்சிகளும் அரங்கேறி உள்ளன.
அந்த வரிசையில் நடிகர் தனுஷும் தனது அரசியல் அவதாரத்திற்கான காய்களை நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது. இதற்கு அச்சாரம் போடும் வகையில் தனது பிறந்த நாளை ஒட்டி சென்னை அடுத்த மஞ்சங்கரணையில் பிரம்மாண்ட ரசிகர்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தியதும், அதில் பேசிய கருத்துகளும் இணையத்தில் பேசுபொருளானது. அதைத் தொடர்ந்து சென்னை சாலிகிராமத்தில் தான் படித்த பள்ளிக்கு மூன்று மாடி கட்டடம் கட்டிக் கொடுத்ததும், அவரது ரசிகர்கள் ஆங்காங்கே நடத்திய நலத்திட்ட உதவிகள் விழாவும் அரசியல் வருகைக்கான சமிக்ஞைகளாக வெளிப்பட்டன.
கடந்த வாரம் கோவையில் தனுஷ் ரசிகர் மன்ற மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்ற நிலையில், அதில் ரசிகர் மன்றம் நற்பணி இயக்கமாக மாற்றப்பட்டு புதிய இலச்சினை வெளியிடப்பட்டது. இதன் மூலம் தனுஷின் அரசியல் வருகை ஏறக்குறைய உறுதியானதாகவே கூறப்பட்டது. இந்த நிலையில், நடிகர் தனுஷின் திடீர் டெல்லி பயணம் அதன் மீதான கவனத்தை மேலும் ஈர்த்துள்ளது.
டெல்லியில் முக்கிய பிரமுகர்களை தனுஷ் சந்தித்ததாகவும், தமிழக எழுச்சிக் கழகம் என்ற பெயரில் தேர்தல் ஆணையத்தில் கட்சியை பதிவு செய்ததாகவும் தகவல்கள் வெளியாகின. டெல்லி பயணத்தை நிறைவு செய்த கையோடு வரும் ஞாயிற்றுக்கிழமை நற்பணி மன்ற நிர்வாகிகள் சந்திப்பை நடத்தவும், அந்த சந்திப்பின்போது மகளிர் நிர்வாகிகளுடன் ஆலோசிக்கவும் தனுஷ் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 2031ஐ இலக்காக கொண்டு களமாட தனுஷ் திட்டமிட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், விரைவில் அதற்கான அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
2031 தேர்தலில் நடிகர் தனுஷ் போட்டி
