மதுரை, அக். 27-
மதுரை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் பழனி, மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் ஆகியோருடன் இணைந்து மாநகராட்சியின் பல்வேறு முக்கியப் பகுதிகளில் நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டார்.
வைகை – யானைக்கல் தரைப்பாலம் பகுதிகளில் ஆற்றில் வரும் மழைநீர் எவ்விதத் தடையுமின்றி சீராகக் கடந்து செல்வதை உறுதி செய்யும் பணிகளை ஆய்வு செய்தார்.
பாலத்தின் கீழ்ப்பகுதியில் மரக்கட்டைகள், நெகிழி மற்றும் கழிவுகள் ஏதேனும் அடைப்பு ஏற்படுத்தாத வண்ணம் உடனுக்குடன் அகற்றிடவும், ஆற்றங்கரைப் பகுதிகளில் முன்னெச்சரிக்கைப் பணிகளைத் துரிதப்படுத்தவும் கள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
செல்லூர் பந்தல்குடி கால்வாயில் மழைநீர் சீராக வெளியேறும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு முன்னேற்பாடுகளைப் பார்வையிட்டார். நீரோட்டப் பாதையில் எவ்வித அடைப்புகளும் ஏற்படாதவாறு தொடர்ந்து கண்காணிக்கவும், கரைகளின் ஸ்திரத்தன்மையை உறுதி செய்து அருகிலுள்ள குடியிருப்புப் பகுதிகளில் மழைநீர் புகாதவாறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தினார்.
பொதுமக்கள் மற்றும் பயணிகள் அதிகம் கூடும் முக்கியப் பகுதியான மதுரை பெரியார் பேருந்து நிலையம் மற்றும் இரயில் நிலைய சுற்றுவட்டாரத் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்காமல் விரைந்து வெளியேறும் பணிகளை ஆய்வு செய்தார்.
வைகை – யானைக்கல் தரைப்பாலத்தைகண்காணிப்பு அலுவலர் பழனி ஆய்வு செய்தார்
