தஞ்சாவூர், அக். 23-
தஞ்சை பெரிய கோயிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் 1,041வது சதய விழா மங்கள இசையுடன் தொடங்கியது. பட்டிமன்றம், கவியரங்கம், நாட்டியாஞ்சலி என பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.
உலக புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் இராஜராஜ சோழன் பிறந்த மற்றும் அரியணையில் ஏறிய ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தை ஆண்டுதோறும் சதய விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதேபோல் மாமன்னன் இராஜராஜ சோழனின் 1,041வது சதய விழா அரசு விழாவாக நேற்றும் (21 மற்றும் 22) மற்றும் இன்றும் இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.
இந்த விழாவை முன்னிட்டு அரண்மனை வளாகத்தில் இருந்து குதிரைகள் பூட்டிய ரதத்தில் நூற்றுக்கணக்கான நாட்டுப்புற கலைஞர்களின் கலை நிகழ்ச்சியோடு முக்கிய வீதிகள் வழியாக நகர்வலம் நடைபெற்றது. மேலும், தஞ்சாவூரில் ராஜராஜ சோழனின் 1041-ஆவது சதயவிழாவையொட்டி, 1041 நாட்டியக் கலைஞர்கள் பங்கேற்ற பிரமாண்ட நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. பெருவுடையார் கோயிலில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், ஒரே நேரத்தில் ஆயிரத்து 41 பரத கலைஞர்கள் அபிநயம் பிடித்து நாட்டியாஞ்சலி செலுத்தியதை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர். இரண்டாம் நாளான இன்று காலை அரசு சார்பில் சோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளனர். அதனை தொடர்ந்து பெருவுடையாருக்கு 48 வகையான திரவியங்களால் பேராபிஷேகம் நடைபெற உள்ளது. தொடர்ந்து சோழன் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் இயக்கத்தினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளனர். சதயவிழாவை முன்னிட்டு நாளை தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜராஜ சோழனின் 1041வதுசதய விழா தொடங்கியது
