மதுரை மத்திய சிறையில் கஞ்சா புழக்கம்:சட்டம்-ஒழுங்கு போலீஸ் நடவடிக்கை எடுக்குமா?

மதுரை, நவ. 22-
மதுரை மத்திய சிறையில் கஞ்சா உட்பட தடை செய்யப்பட்ட பொருட்கள் தாராளமாக ஊடுருவுவதாகவும், அதைத் தடுக்க முடியாமல் காவலர்கள் தவிப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.
இச்சிறையில் வார நாட்களில் 50க்கும் மேற்பட்ட கைதிகளை உறவினர்கள், வழக்கறிஞர்கள் சந்தித்து வருகின்றனர். அவர்கள் கைதிகளுக்கு கொடுக்கும் தின்பண்டங்களில் கஞ்சா போன்றவை மறைத்து கொடுப்பதாக புகார் எழுந்தது. இதைத் தவிர்க்க சிறை அங்காடியில் இருந்துதான் தின்பண்டங்கள் வாங்கி கொடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இதன் மூலம் கஞ்சா உட்பட தடை செய்யப்பட்ட பொருட்கள் தடுக்கப்பட்டது. இருப்பினும் நீதிமன்ற விசாரணைக்கு சென்று வரும் கைதிகளுக்கு, சில வழக்கறிஞர்கள் மூலம் ஊடுருவுவது தொடர்கிறது.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு, ஒரு கைதியை சந்திக்க வந்த வழக்கறிஞர்களில் ஒருவரின் நடவடிக்கைகள் சந்தேகத்திற்குரியதாக இருந்தது. அவரை முழுமையாக சோதனையிட தயங்கிய காவலர்கள், விசாரித்து ‘கஞ்சா இல்லை’ என்ற முடிவுக்கு வந்தனர். இதுபோல் சோதனையிட முடியாத ‘சிலர்’ மூலம் கஞ்சா, பீடி போன்றவை கைதிகளுக்கு கொடுக்கப்படுவதாக காவலர்கள் புலம்புகின்றனர்.
அவர்கள் கூறியதாவது: சிறைக்குள் கஞ்சாவை ஒழிக்கவே முடியவில்லை. குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி ஒருவர், நேர்காணல் ஒன்றில் ‘ஒரு கட்டு பீடி 35 ரூபாய். அதை சிறைக்குள் ரூ.3500 க்கும், ரூ.4 ஆயிரத்துக்கும் விற்கின்றனர். நானே பல லட்சங்களுக்கு பீடி வாங்கினேன்’ என தெரிவித்தார்.
பீடியில் கஞ்சா வைத்தும் புகைக்கின்றனர். கைதிகளின் ஆசனவாய், செருப்பு, உள்ளாடை என பலவகைகளில் கஞ்சா, பீடியை கொண்டு வந்து உள்ளே 10 மடங்கு லாபம் வைத்து விற்கின்றனர். நாங்கள் முடிந்தளவு தடுத்தாலும், முற்றுப்புள்ளி வைக்க முடியவில்லை.
சிறை பாதுகாப்பு குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்டுள்ள உயர்மட்ட குழு, கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்கள் ஊடுறுவுவதை தடுக்கும் வழிமுறைகள் குறித்து ஆராய வேண்டும் என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *