மதுரை, அக். 24-
மதுரை மாவட்டத்தில் வங்கிக் கணக்குடன் ஆதார் அட்டையை இணைக்காத 6500 முதியோர்களுக்கான ஓய்வூதியம் நிறுத்தப்பட்டுள்ளதால் தினமும் கலெக்டர் அலுவலகத்திற்கு அலைகின்றனர்.
அரசு சார்பில் முதியோர்களுக்கு மாதந்தோறும் ரூ.1200 ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. பலருக்கு 2 மாதங்களாக வழங்கப்படவில்லை. இதனால் அவர்கள் தாலுகா, கலெக்டர் அலுவலகங்களுக்கு அலைகின்றனர். கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர் புகார் மனுக்களை பதிவு செய்யும் அறைக்கும் தினமும் 20 முதல் 25 பேராவது பணம் வராதது குறித்து கேட்கின்றனர்.
பலர் தங்கள் வங்கிக் கணக்குடன் போன் இணைப்புடன் உள்ள ஆதார் அட்டையை இணைக்காமல் உள்ளனர். மத்திய அரசு அனைத்து வங்கிக் கணக்குடனும் ஆதார் அட்டையை இணைக்க தீவிரம் காட்டி வருகிறது. இதனால் ஓய்வூதியம் நிறுத்தப்பட்டுள்ளதாக அலுவலர்கள் தெரிவித்தனர்.
அவர்கள் கூறியதாவது: மதுரை மாவட்டத்தில் 1.53 லட்சம் பேர் மத்திய, மாநில அரசுகளின் உதவித்தொகையை பெறுகின்றனர். இதில் முதியோர் மட்டும் 53 ஆயிரம் பேர். 29 ஆயிரம் பேர் விதவைகள், 1500 பேர் மாற்றுத்திறனாளிகள். மீதியுள்ளோர் பல்வகை உதவித்தொகையை பெறுகின்றனர். மாவட்டத்தில் 6500 பேர் வங்கிக் கணக்கை இன்னும் இணைக்காமல் உள்ளனர். இணைத்தவர்களுக்கு உடனுக்குடன் வந்து விடுகிறது என்றனர்.
தினமும் கலெக்டர் அலுவலகத்திற்கு அலையும் முதியோர்கள்: ஓய்வூதியம் வராததால் புலம்பல்
