டெல்லி, அக். 23-
எஸ்ஐஆர் முறைகேடு விவகாரத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ராஜினாமா செய்ய வலியுறுத்தி இன்று நாடு
தழுவிய போராட்டத்திற்கு விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.
அகில இந்திய கிசான் மோர்ச்சா, அகில இந்திய கிசான் சபா உள்ளிட்ட விவசாய அமைப்புகள் இணைந்து டெல்லி மட்டுமல்லாது நாடு முழுவதும் போராட்டம் நடத்த திட்டமிட்டு உள்ளன. தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்ய வேண்டும், சட்ட விரோதமான எஸ்ஐஆர் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட விவசாய சங்கங்கள் முடிவு செய்துள்ளன.
வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணியில் (SIR) பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், லட்சக்கணக்கான தகுதியான வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சிகளும், சிவில் சமூக அமைப்புகளும் குற்றம் சாட்டி வருகின்றன. இந்த நிலையில், விவசாய சங்கங்களும் தங்களது ஆதரவைத் தெரிவித்துப் போராட்டத்தில் களமிறங்கியுள்ளன
ஞானேஷ் குமார் உடனடியாகப் பதவி விலகக் கோரி, சம்யுக்த கிசான் மோர்ச்சா (SKM) உள்ளிட்ட விவசாய அமைப்புகள் நாடு தழுவிய போராட்டத்திற்கும், டெல்லி நோக்கிய பேரணிக்கும் அழைப்பு விடுத்துள்ளன. விவசாயிகளுடன் இணைந்து தொழிலாளர் சங்கங்கள், பல்வேறு சிவில் சொசைட்டி அமைப்புகளும் போராட்டத்தில் பங்கேற்க உள்ளதாக அறிவித்து உள்ளன. இந்த நாடு தழுவிய போராட்டத்தில் விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் திக்காயத், பொருளாதார ஆய்வாளர் பரகலா பிரபாகர், மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் உள்ளிட்டோரும் பங்கேற்கின்றனர். இவர்களை தவிர நடிகர் பிரகாஷ் ராஜ், மாணவர் அமைப்புகளின் தலைவர்கள் நேகா போரா, ஆய்ஷா கோஷ் உள்ளிட்டோரும் நாளைய போராட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.
தலைமை தேர்தல் ஆணையர் ராஜினாமா செய்யக் கோரி டெல்லியில் விவசாய சங்கங்கள் போராட்டம்
