சென்னை, அக். 25-
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இளைஞர் அணி சார்பில் கண்ணியமிகு காயிதே மில்லத் வழியில் அரசியல் எழுச்சி பொதுக்கூட்டம் சென்னை எழும்பூரில் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பங்கேற்றார். இந்நிகழ்வில் பேசிய அமைச்சர், 2029 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் இந்தியாவின் வெற்றி தமிழகத்தில் இருந்து உருவாகும் எனவும், இதை தடுக்கும் நோக்கில்தான் சில நடிகர்கள் டெல்லிக்கு சென்று முகாமிட்டுள்ளதாகவும் யார் வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது எனவும் நடிகர் தனுஷை மறைமுகமாக விமர்சித்தார்.
திமுக என்பது சாத்தானின் குழந்தைகளாக மாறிவிட்டதாகவும், புதிது புதிதாக பல சாத்தானின் குழந்தைகள் தவெகவின் வெற்றியை சீர்குலைக்க முயல்வதாகவும் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா சாடினார். தற்போது பாஜகவை எதிர்ப்பதாக கூறிவரும் திமுகதான் 1999-ஆம் ஆண்டு பாஜக ஆட்சியமைக்க முக்கிய காரணமாக இருந்ததாகவும், அப்போதைய சூழலில் பாஜகவிற்கு கருணாநிதி ஆதரவளிக்காமல் இருந்திருந்தால் பாஜக ஆட்சி நீடித்திருக்காது எனவும் குறிப்பிட்டார்.
60 ஆண்டுகாலமாக கூட்டணியில் இருந்த இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு திமுக உண்மையாக இல்லை எனவும், எத்தனை தேர்தல்கள் வந்தாலும் நூறாண்டுகள் ஆனாலும் பாஜகவுடன் தவெக கூட்டணி அமைக்காது எனவும் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, பாஜக எதிர்ப்பு காரணமாக தாங்கள் சிறை செல்ல நேரிடலாம் எனவும் தெரிவித்தார்.
தவெகவின் வருங்கால வெற்றியை தடுத்து சீர்குலைக்கும் நோக்கத்தில் எந்த நடிகர் அரசியலுக்கு வந்தாலும் ஒன்றும் நடக்காது எனவும், டெல்லியில் முகாமிட்டுள்ள நடிகரால் தவெக கூட்டணியின் வெற்றியில் பாதிப்பை ஏற்படுத்த முடியாது எனவும் நடிகர் தனுஷின் அரசியல் பிரவேசம் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜூனா கடுமையாக தாக்கிப்பேசினார்.
டெல்லியில் முகாமிட்டுள்ள நடிகர்:புதிது புதிதாக வரும் சாத்தானின் பிள்ளைகள் என அமைச்சர் ஆதவ் சாடல்
