விழுப்புரம், அக். 28-
செஞ்சி சிறுமி மாயமான வழக்கில் சிபிசிஐடி திணறுவதால் கூடுதல் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கு தொடர்பாக ரவுடி, பெண், வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே ஆலம்பூண்டியை சேர்ந்த வடிவேலு, பவானி தம்பதியின் மகள் ஹேமாவதி(7). அரசுப்பள்ளியில் 2ம்வகுப்பு படித்து வந்த சிறுமி கடந்த 11ம் தேதி இரவு வீட்டில் பெற்றோருடன் பிறந்தநாள் கொண்டாடிவிட்டு தூங்கச் சென்றவர் காலையில் மாயமானார்.
இதுகுறித்து சத்திய
மங்கலம் போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தினர். 10 தனிப்படை
கள் அமைக்கப்பட்டு, 50 டிரோன்கள் மூலம் தேடுதல் வேட்டை நடத்தியும் போலீசாரால் எந்த துப்பும் துலக்க முடியாததால், சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. விசாரணை அதிகாரியாக டிஎஸ்பி கீதா நியமிக்கப்பட்டு கடந்த 21ம்தேதி ஆலம்பூண்டி கிராமத்தில் விசாரணையை தொடங்கினார். சிறுமியின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் அவர் படித்து வந்த பள்ளியிலும், தோழிகளிடமும் விசாரணை நடத்தினார்.
கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் ரயில், பேருந்து நிலையங்களிலும் தேடுதல் வேட்டையிலும், கண்காணிப்பு கேமராவை கைப்பற்றியும் விசாரணை மேற்கொண்டனர். சிறுமி கடத்தலா, விற்கப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் சிறுமியின் தாய் இதற்கு மறுப்பு தெரிவித்திருந்தார். ஆனால், சிறுமி மாயமான அன்று அதிகாலை 3 மணிக்கு அலறல் சத்தம் கேட்டதாக பக்கத்து வீட்டுக்காரர் தெரிவித்ததால், பெற்றோர் மீது சந்தேகத்தின் அடிப்படையில் சிபிசிஐடி தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிபிசிஐடி போலீசார் விசாரணைக்கு மாறி 5 நாட்களாகியும் எந்தவித துப்பும் துலங்காத நிலையில் தவெக அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் காஞ்சி
புரம் மாவட்ட சிபிசிஐடி டிஎஸ்பி வேல்முருகன் விசாரணை அதிகாரியாக கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளார். மேலும், செங்கல்பட்டு உள்ளிட்ட 5 மாவட்டங்களை சேர்ந்த 20 சிபிசிஐடி போலீசாரும் விசாரணை குழுவில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் நேற்று மாலை முதல் செஞ்சி பகுதியில் பல்வேறு கோணங்களில் விசாரணையை மேற்கொண்டு வருகி
ன்றனர். இதனிடையே, பரதன்தாங்கல் கிராமத்தை சேர்ந்த பிரபல ரவுடி ராஜதுரையை சந்தேகத்தின் பேரில் பிடித்து சத்தியமங்கலம் காவல்நிலையத்தில் 4 மணி நேரமாக டிஎஸ்பி வேல்முருகன் விசாரணை நடத்தினார். தொடர்ந்து அவரை பரதன்தாங்கல் கிராமத்தில் உள்ள சுடுகாட்டுக்கும், அவர் புதிதாக கட்டி வரும் கட்டிடத்துக்கும் நேரில் அழைத்து சென்று விசாரணை செய்தனர். இதற்கிடையே மேல்அருங்குணம் கிராமத்தை சேர்ந்த ஒரு பெண், மற்றொரு வாலிபரையும் காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிபிசிஐடி போலீசார் அருகில் உள்ள நகரங்கள் மற்றும் பேருந்து நிலையம், ரயில் நிலையங்களிலும் சிறுமியின் நடமாட்டம் குறித்தும், சிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டு அலசி ஆராய்ந்துள்ளனர். அதிலும் எந்தவித துப்பும் கிடைக்க வில்லையாம். ஒரு வேளை சிறுமி வெளி மாநிலத்திற்கு கடத்தப்ப
ட்டாரா என்ற சந்தே
கத்தின்பேரில் ஆந்திரா, கர்நாடக பகுதி மாவட்ட எல்லைகளிலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த நேரத்தில் மாவட்ட எல்லைப்பகுதியிலிருந்து சென்ற வாகனங்கள் குறித்தும் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர்.
மாயமான சிறுமியை 15 நாளாகியும் கண்டுபிடிக்காத தவெக அரசை கண்டித்து ஏற்கனவே திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்ட நிலையில், அதிமுக விழுப்புரம் மாவட்ட செயலாளர் பசுபதி தலைமையில் ஆலம்பூண்டியில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. முன்னாள் எம்பி ஏழுமலை, அவைத்தலைவர் மாவட்ட தேவராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். மேலும் சிறுமியை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் அதிமுக சார்பில் விழுப்புரம் மாவட்ட தலைநகரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவோம் எனவும் எச்சரிக்கை விடுத்தனர்.
செஞ்சி சிறுமி மாயமான வழக்கில் சிபிசிஐடி திணறல்: கூடுதல் அதிகாரி நியமனம்
