மூல வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு;கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

தேனி, அக். 24-
தேனி மாவட்டம், வருசநாடு வனப்பகுதியில் விடிய விடிய பெய்த கனமழையால் மூல வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ, விவசாய நிலங்களுக்குச் செல்வதற்காக ஆற்றைக் கடக்கவோ வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு
ள்ளது.
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள வருசநாடு பகுதியில் கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக, வெள்ளிமலை, மேகமலை, அரசரடி, முத்தாளம்பாறை, கலாமலை உள்ளிட்ட வனப்பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, கடந்த ஆறு மாதங்களாக வறண்டு காணப்பட்ட மூல வைகை ஆற்றில் சில நாட்களுக்கு முன்பு நீர்வரத்து தொடங்கியது. இந்நிலையில், நேற்று இரவு பெய்த கனமழையால் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து, தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, வெள்ள அபாயத்தைக் கருத்தில் கொண்டு, ஆற்றுப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் எனப் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்ப
ட்டுள்ளது. மேலும், வருவாய்த் துறையினர் மற்றும் காவல் துறையினர் ஆற்றுப் பகுதிகளில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மொத்தம் 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம், இன்று காலை நிலவரப்படி 46.52 அடியாக உள்ளது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, வினாடிக்கு 1,265 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து குடிநீர்த் தேவைக்காக மட்டும் வினாடிக்கு 86 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீர் இருப்பு 1,568 மில்லியன் கனஅடியாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, கேரள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும், வருசநாடு மற்றும் மூல வைகை ஆற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும் தொடர்ந்து விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இதனால், மூல வைகை ஆற்றில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மழையின் காரணமாக, தேக்கடி பகுதியில் அதிகபட்சமாக 75.4 மில்லிமீட்டர் மழையும், பெரியாறு பகுதியில் 26.8 மில்லிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
பெரியாறு அணையின் நீர்மட்டம் 19.75 அடியாக உள்ளதாகவும், அணைக்கு வினாடிக்கு 4,271 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரியாறு அணையிலிருந்து வைகை அணைக்கு வினாடிக்கு 400 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்த நீரும் மூல வைகை ஆற்றின் நீர்வரத்துடன் இணைந்து வைகை அணையை விரைவில் வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் வைகை அணையின் நீர்மட்டம் மேலும் உயர்ந்து, அணையின் முழுக் கொள்ளளவான 71 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஆண்டிப்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டமும் உயர வாய்ப்புள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இருப்பினும், ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரிக்கக்கூடும் என்பதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும், ஆற்றைக் கடக்கவோ, நீரில் இறங்கவோ வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *