மதுரை, நவ.4-
மதுரை மாநகராட்சி 100 வார்டுகளில் ‘அவர்வேல்ஸ்’ தனியார் நிறுவனம் தூய்மைப் பணி மேற்கொண்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் தூய்மைப் பணி திருப்திகரமாக இல்லை என மாநகராட்சி நிர்வாகத்தினரும், மக்கள் பிரதிநிதிகளும் அரசுக்கு தொடர்ந்து தெரிவித்து வந்தனர். குப்பையை முறையாக அகற்றாதது, தூய்மைப் பணி கூலியில் குறைபாடுகள் உள்ளிட்ட பல்வேறு புகார்கள் ஒப்பந்த நிறுவனத்தின் மீது எழுந்தது. தற்போது இந்நிறுவனத்தின் டெண்டர் கால முடிவடையும் நிலையில் உள்ளது. இதையடுத்து, நீண்ட காலமாக நிலவி வரும் தூய்மைப் பணி பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் மாநகராட்சியின் 81 வார்டுகளில் தூய்மைப் பணியை (திடக்கழிவு மேலாண்மைப் பணி) தனியாரிடம் 18 மாதங்களுக்கு ஒப்படைக்க மாநகராட்சி நிர்வாகம் ரூ.270 கோடி மதிப்பில் டெண்டர் கோரியுள்ளது.
மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: அவர்வேல்ஸ் நிறுவனத்தின் தூய்மைப் பணி தொடர்பான குற்றச்சாட்டுகள் எழுந்ததையடுத்து, இந்நிறுவனத்தின் மீது மாநகராட்சி நிர்வாகம் அபராதமும் விதித்தது. மேலும், கடந்த ஓராண்டாக இந்நிறுவனம் குறித்து அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டது. இந்நிறுவனத்தின் ஒப்பந்தம் நவம்பர் 2-வது வாரத்துடன் முடிவடைகிறது.
இந்நிலையில், புதிய டெண்டர் கோரப்பட்டுள்ளது. இந்த நடைமுறை நவம்பர் 30-ம் தேதி நிறைவடையும் என்பதால், தற்போதைய நிறுவனத்தின் பணி நவம்பர் மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளது. புதியதான இந்த ஒப்பந்த புதிய நிறுவனம் பொறுப்பேற்கும்.
புதிய டெண்டரில் பணியாளர்களின் பற்றாக்குறையைப் போக்கும் வகையில் கூடுதல் தூய்மைப் பணியாளர்களை நியமிக்க வேண்டும். வீடுகள், பொது இடங்களில் சேகரிக்கப்படும் குப்பையை உடனுக்குடன் உரக்கிடங்குக்கு கொண்டு செல்லும் வகையில் வாகனங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் உள்ளிட்ட அம்சங்கள் சேர்க்கப்பட்டு
ள்ளன.
புதிய தனியார் நிறுவனத்தின் தூய்மைப் பணி, மண்டலங்கள் 1, 2, 3 மற்றும் 5-ல் உள்ள 81 வார்டுகளில் மட்டுமே நடைபெறும். மண்டலம் 4-ல் உள்ள 18 வார்டுகள் மற்றும் 84-வது வார்டில் மாநகராட்சியின் நிரந்தரத் தூய்மைப் பணியாளர்களை கொண்டு தூய்மைப் பணி மேற்கொள்ளப்படும்.
குப்பைகளை சிறப்பாக சேகரிப்பது, அவற்றை எடுத்துச் செல்வது, தெருக்களை தூய்மைப்படுத்துவது, சந்தைகள் மற்றும் பொது இடங்களை சுத்தம்படுத்துவது உள்ளிட்ட பணிகளை புதிய ஒப்பந்தத்தின் கீழ் மேற்கொள்ளப்படும். மேலும், மழைநீர் வடிகால்களில் மண் மற்றும் கழிவுகளை அகற்றும் பணிகளையும் புதிய ஒப்பந்த நிறுவனம் மேற்கொள்ள வேண்டும்.
தேர்வு செய்யப்படும் நிறுவனம், 38 நுண்உரமாக்கல் மையங்கள் மற்றும் தலா 200 டன் கொள்ளளவு கொண்ட 2 திரவக்கழிவு மாற்று நிலையங்களை பராமரித்து இயக்க வேண்டும். இந்த பணிகளுக்கான மேற்பார்வையாளர்கள், ஓட்டுநர்கள் உள்ளிட்ட இதர பணியா
ளர்களை தவிர, குறைந்தபட்சம் 3,407 தூய்மைப் பணியாளர்களை நியமிக்க வேண்டும் என டெண்டரில் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
காலை 6 முதல் பிற்பகல் 2 மணி வரை, பிற்பகல் 2 முதல் இரவு 10 மணி வரை, இரவு 10 முதல் மறுநாள் காலை 6 மணி வரை என 3 ஷிப்ட் முறையில் தூய்மைப் பணிகள் நடைபெறும். பணியாளர்களின் வருகையை உறுதிசெய்ய பயோமெட்ரிக் வருகைப் பதிவு, வாகனங்களை கண்காணிக்க ஜிபிஎஸ் தொழில் நுட்பம், வீடுகளில் குப்பை சேகரிப்பதை கண்காணிக்க ‘கியூஆர் கோடு’ அல்லது ஆர்எப்ஐடி தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
மதுரை மாநகராட்சியில் தூய்மை பணியை மேற்கொள்ள புதிய ‘டெண்டர்’ பயோமெட்ரிக் வருகை பதிவு: வாகனங்களை கண்காணிக்க ஜிபிஎஸ் கட்டாயம்
