திருப்பரங்குன்றம் தீபம் வழக்கு:150 ஆண்டுகால வழக்கத்தை மாற்றினால் சலசலப்பு ஏற்படும்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வாதம்

திருப்பரங்குன்றம்,
நவ. 19-
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கில், நீதிமன்ற உத்தரவுகளுக்கு எதிராகத் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
திருப்பரங்குன்றம் மலையில் அமைந்துள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதிக்கக் கோரி இந்து தமிழர் கட்சித் தலைவர் ராம ரவிக்குமார் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், கார்த்திகை தீபத் திருவிழாவன்று மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என உத்தரவிட்டார்.
இதற்கு எதிராகத் திருக்கோவில் நிர்வாகம், மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை ஆணையர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜெயச்சந்திரன் மற்றும் ராமகிருஷ்ணன் அடங்கிய இரு நீதிபதிகள் அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்து கடந்த ஜனவரி மாதம் தீர்ப்பளித்தது.
உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்துத் தமிழக அரசு உச்ச நீதிமன்ற
த்தில் மேல்முறையீடு செய்துள்ளது. மேலும், காவல்துறை மற்றும் தொல்லியல் துறையின் நிபந்தனைகளை எதிர்த்து ராம ரவிக்குமார் தரப்பிலும், திருப்பரங்குன்றம் மலையைத் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் எடுத்து தீபத்தூணில் அணையா விளக்கு ஏற்றவும், பாதுகாப்பிற்காக மத்திய ரிசர்வ் காவல் படையை (CRPF) பணியமர்த்தவும் கோரி இந்து தர்ம பரிஷத் அமைப்பின் சார்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. நீதிபதிகள் அரவிந்த் குமார், வி.எம். பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வில் இந்த மனுக்கள் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் டி.ஜி. வினய் ஆகியோர் தரப்பில் முன்வைக்கப்பட்ட முக்கிய வாதங்கள்;
24-ம் தேதி கார்த்திகை தீபத் திருவிழா கொண்டாடப்படவுள்ள நிலையில், குன்றின் உச்சியில் உள்ள கல்தூணில் தீபம் ஏற்றும் வழக்கம் வரலாற்றில் எப்போதும் இருந்ததில்லை. 150 ஆண்டுகளுக்கும் மேலாக, ஆகம விதிகள் மற்றும் ஸ்தானிகர்களின் ஆலோசனையின்படி, உச்சிப்பிள்ளையார் கோவில் பகுதியில் உள்ள தீப மண்டபத்தில் மட்டுமே கோவில் நிர்வாகத்தால் தீபம் ஏற்றப்பட்டு வருகிறது.
1923-ஆம் ஆண்டு நீதிமன்றத் தீர்ப்பு மற்றும் லண்டன் பிரிவி கவுன்சில் உத்தரவின்படி, நெல்லித்தோப்பு பகுதி, பள்ளிவாசல் செல்லும் படிகள், மலை உச்சியில் உள்ள பள்ளிவாசல் மற்றும் கொடிக்கம்பம் அமைந்துள்ள பாறை ஆகிய இடங்களைத் தவிர்த்து, ஒட்டுமொத்த மலையும் கோவிலுக்குச் சொந்தமானது என உறுதி செய்யப்பட்டுள்ளது. வழிபாடுகள் தொடர்ந்து நடைபெற்று வரும் கோவில் நிர்வாகத்தைத் தொல்லியல் துறை கையகப்படுத்த முடியாது என்றும், தனியார் அமைப்புகளுக்கு இதில் எவ்வித உரிமையும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடைமுறையில் உள்ள வழக்கத்தை மாற்றினால் சலசலப்பு ஏற்படக்கூடும் என்பதால், உயர் நீதிமன்ற உத்தரவுக்குத் தடை விதித்து இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனத் தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது. இந்த வழக்கு தொடர்பான அடுத்தகட்ட விசாரணை இன்று பிற்பகல் 2 மணிக்கு நடைபெறவுள்ளது.
மறுபுறம், பாரம்பரிய உரிமைகளின் அடிப்படையில் தீபத்தூணில் பக்தர்கள் அமைதியான முறையில் தீபம் ஏற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என இந்து அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. மேலும், ஆட்சிக்கு வருவதற்கு முன்பு இந்த விவகாரத்தில் மௌனம் காத்த தற்போதைய ஆளும் தரப்பு, தற்போது ஒருதலைப்பட்சமாகச் செயல்படுவதாகவும், கடந்த கால ஆட்சியாளர்கள் செய்த அதே தவறைத் தற்போதைய அரசும் செய்வதாகவும் சமூக வலைதளங்களிலும் அரசியல் தளத்திலும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *