கொடைக்கானலில் கன மழை; காட்டு ஆறுகளில் பெருக்கெடுத்த வெள்ளம்: வெளியேற முடியாமல் தவிக்கும் கிராம மக்கள்

கொடைக்கானல், அக். 25-
கொடைக்கானல் மலைப் பகுதியில் உள்ள காட்டாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் சின்னூர், பெரியூர் உள்ளிட்ட மலைக்கிராம மக்கள் கிராமத்தை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.
கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் சின்னூர், பெரியூர் உள்ளிட்ட மலைக்கிராமங்களில் சாலை வசதி இல்லை. இக்கிராம மக்கள் அவசரம் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக பல கி.மீ. தொலைவுக்கு வனப்பகுதி வழியாக நடந்தே சென்று வரும் நிலை உள்ளது.
இந்நிலையில், நேற்று பிற்பகல் 3 மணிக்கு பெய்த கனமழையால், மலைக்கிராம மக்கள் செல்லும் வழியில் உள்ள கல்லாறு, மூலையாறு, கெங்காரு ஓடை என்று அழைக்கப்படும் பெரியாறு உள்ளிட்ட காட்டாற்றில் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால், மக்கள் தங்கள் கிராமத்தை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இவர்கள் மருத்துவ தேவைக்குக்கூட சென்று வர முடியாமல் தவித்து வருகின்றனர். கனமழை காரணமாக, கிராமத்தில் சில வீடுகளும் சேதமடைந்துள்ளன. மின்தடையும் ஏற்பட்டுள்ளதால், கிராமங்கள் இருளில் மூழ்கியுள்ளது. முன்னதாக, கொடைக்கானலின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான, நுழைவிடத்தில் உள்ள வெள்ளி நீர்வீழ்ச்சியில் மழைநீர் பெருக்கெடுத்து ஆர்ப்பரித்துக் கொட்டியது. வழக்கமாக வெள்ளியை உருக்கி ஊற்றுவதைப் போலக் காட்சியளிக்கும் இந்த நீர்வீழ்ச்சி, பெருமழையால் முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில், பெரும் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய நிலையில் காட்சியளித்தது.
இதன் காரணமாக கொடைக்கானல் செல்லும் பாதையில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்தது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகி
னர். வெள்ளி நீர்வீழ்ச்சி வெள்ளப்பெருக்கு காணொளி சமூக ஊடகங்களில் பெரும் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *