உதகையில் தரமற்ற உணவு வழங்குவதாக குற்றச்சாட்டு:உணவு பாதுகாப்புத்துறை ஆய்வு செய்யுமா?

நீலகிரி, அக். 28-
நீலகிரி மாவட்டத்தில், இரண்டாம் சீசன் நிலவி வரும் நிலையில், உணவு பாதுகாப்பு துறையினர், போதிய ஆய்வு செய்யாத காரணத்தால், பல ஓட்டங்களில் தரமற்ற உணவு வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நீலகிரியில் இரண்டாம் சீசன் நிலவி வரும் நிலையில், ஊட்டி, குன்னுார், கோத்தகிரி உட்பட பல்வேறு பகுதிகளிலும் வார நாட்களில், 5 முதல் 7 ஆயிரம் வரையிலும், வார இறுதி நாட்களில், 10 முதல், 15 ஆயிரம் வரையிலும் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இவர்கள், இங்குள்ள விடுதிகளில் தங்கி, சுற்றுலா மையங்களுக்கு செல்லும் போது, மாவட்டத்தில் உள்ள உணவங்களுக்கு செல்வது வழக்கம்.
இங்கு வரும் பயணிகளுக்கு தரமான உணவு வழங்குவதை உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு பணியை மேற்கொண்டு வருகின்றனர். இந்த குழுவினர், உணவு விற்பனையாளர்கள், உணவகங்கள் மற்றும் தயாரிப்பு நிறுவனங்களுக்கு உரிமம் மற்றும் பதிவு சான்றிதழ் வழங்கி வருகின்றனர். மேலும், உணவகங்கள், உணவு தயாரிப்பு கூடங்கள் உட்பட உணவு பொருட்கள் விற்பனை தளங்களிலும், திடீர் ஆய்வு செய்து சுகாதார முறைகளையும் பின்பற்ற விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில், ‘நீலகிரியில் இரண்டாம் சீசன் நிலவி வரும் நிலையில், 6 தாலுகா பகுதிகளில் உள்ள ஓட்டல்கள், சிறிய உணவகங்கள், வணிக நிறுவனங்கள், பேக்கரி, விடுதி சமையலறைகள் மற்றும் இறைச்சி கடைகளில் சிறப்பு, செப்., முதல் நவ., 30 ம் தேதி வரை, திடீர் ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும்,’ என, மாநில உணவு பாதுகாப்பு துறை உத்தரவிட்டுள்ளது.
ஆனால், நீலகிரியில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் ஆய்வக பகுப்பாய்வாளர்களின் பல பணியிடங்கள் காலியாக இருப்பதால், மாவட்டம் முழுவதும் ஆய்வு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதனால், சுற்றுலா தலமான ஊட்டி மற்றும் பல பகுதிகளில் பயணிகளுக்கு தரமற்ற உணவு வகைகள் வழங்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனை உறுதிபடுத்தும் விதமாக, ஒரு மாதத்துக்கு முன்பு, நீலகிரி எட்டினஸ் சாலையில் உள்ள அங்காரா என்ற அசைவ உணவு ஓட்டலில் தரமில்லாத உணவு வழங்கப்பட்டது. இது குறித்த தகவலில் பேரில், நகராட்சி சுகாதார துறையினர், 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். இரு நாட்களுக்கு முன்பு, கமர்சியல் சாலையில் உள்ள கைலாஷ் பர்பத் ஓட்டலில் வெஜிடெபிள் பிரியாணியில் புழுக்கள் நெளிந்து குறித்து அங்கு வந்த நபர் வீடியோ பதிவு செய்து சமூக வலை தளங்களில் வெளியிட்டார். அப்போதும், உணவு பாதுகாப்பு துறையினர் வரவில்லை. இந்த தகவலை அறிந்த மாவட்ட கலெக்டர் அந்த ஓட்டலை ஆய்வு செய்ய உத்தரவிட்டார். எனினும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை.
ஊட்டி சீசனுடன், தீபாவளி உள்ளிட்ட பண்டிகையை நெருங்கி வருவதால், மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் இனிப்பு மற்றும் பலகாரத் தயாரிப்பு பணிகள் நடந்து வருகிறது. இந்த சூழ்நிலையில், அனைத்து பகுதிகளிலும், உணவு பாதுகாப்பு துறையினர் திடீர் ஆய்வு செய்து, தரமான உணவு பொருட்களை விற்பனை செய்வதை உறுதி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *