ஆளுங்கட்சியினர் சட்டம் – ஒழுங்கிற்குச் சவால் விடுகின்றனர்டி.ஜி.பி. கருத்தை விமர்சித்த உதயநிதி

சென்னை, நவ. 20-
திமுக இளைஞரணி செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின், “’த.வெ.க.வால் பாதிக்கப்பட்டோர் வழக்குப் பிரிவு’ என ஒன்றை டி.ஜி.பி.அலுவலகத்திலேயே தொடங்கும் அளவுக்கு, ஆளுங்கட்சியினர் சட்டம் – ஒழுங்கிற்குச் சவால் விடுகின்றனர். இத்தகைய சூழலில், சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருப்பதாக டி.ஜி.பி. தனக்குத்தானே ‘சுயச்சான்றிதழ்’ கொடுத்துக்கொள்வது நகைப்புக்குரியது.” எனத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து காவல்துறை டி.ஜி.பி. மகேஷ் குமார் அகர்வால் அளித்துள்ள பேட்டி, உண்மை நிலையை மறைப்பதாக அமைந்துள்ளது. ஆளுங்கட்சிப் பிரமுகரைப் போல, “கடந்த 5 ஆண்டுகளை ஒப்பிடுகையில். இந்த 6 மாத ஆட்சியில் கொலைகள் குறைவுதான்” என்று அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
கடந்த 6 மாதங்களில் குற்றச் செயல்களே நடக்காதது போலவும், சட்டம் ஒழுங்கு சீரும் சிறப்புமாக இருப்பது போலவும் அவர் அளித்திருக்கும் பேட்டியைப் பார்த்தால் அவர் எதிரே அமர்ந்திருப்பவர்களே வாய்விட்டு சிரித்திருப்பார்கள். கடந்த ஐந்து ஆண்டுகளின் சராசரிக் கொலை எண்ணிக்கையை, நடப்பாண்டின் 10 மாதச் சராசரியோடு ஒப்பிடுவது எந்த வகையில் நியாயம்? தீபாவளி அன்று மட்டும் 17 உயிர்கள் பறிபோன நிலையில், டி.ஜி.பி.யே கொலைகள் குறைந்துவிட்டதாகக் கூறுவது ஆறுதல் அல்ல; அது நிர்வாகத்தின் அவலம். உண்மையிலேயே கொலைகள் குறைந்துவிட்டன என்றால், தீபாவளிப் படுகொலைகளுக்குப் பிறகு முதலமைச்சர் ஏன் அவசர ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும். அதில் ஏன் டி.ஜி.பி. பங்கேற்க வேண்டும். “போதைப்பொருள் வழக்குகள் 74 சதவிகிதம் அதிகரித்துள்ளன” என்றும் டிஜிபி கூறியுள்ளார். தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் போதைப் பொருள் தங்கு தடையின்றிக் கிடைக்கிறது என்பதுதானே அதற்கு அர்த்தம்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *