பிஸ்லெரி தண்ணீர் நிறுவனம் விளக்கம்


சென்னை, நவ. 24-
பிஸ்லெரியின் பேக் செய்யப்பட்ட குடிநீரை ஆய்வுக்குட்படுத்தப்பட்டதில் சந்தேகத்திற்கிடமான சில பொருட்கள் கலந்திருப்பதாகவும், இதுதொடர்பாக அந்நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடரலாம் என்றும், இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தெரிவித்து இருந்தது. இதுதொடர்பாக பிஸ்லெரி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் பிஸ்லெரி நிறுவனத்திற்கு அறிவிப்பாணை அனுப்பியுள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் குறித்து நாங்கள் அறிவோம். இந்த விவகாரம் சுமார் 14 மாதங்களுக்கு முந்தையது. அதாவது, எங்களது 143 உற்பத்தி ஆலைகளில் ஒன்றான கோவாவில் உள்ள பிஸ்லெரி ஆலையில், செப்டம்பர் 2025-ல் தயாரிக்கப்பட்ட ஒரு பேட்ச் தொடர்பானதாகும். 30 செப்டம்பர் 2025 அன்று, எப்எஸ்எஸ்ஏஐ கோவா ஆலையிலிருந்து ஆறு மாதிரிகளைச் சேகரித்தது. ஆரம்பகட்ட சோதனையில், ஐந்து மாதிரிகள் அனைத்து தரநிலைகளுக்கும் உட்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது. ஆறாவது மாதிரியில் புரோமேட் அளவு லிட்டருக்கு 12 மைக்ரோகிராம்களாக இருந்தது. இது அனுமதிக்கப்பட்ட வரம்பான 10 மைக்ரோகிராம்களை விட அதிகமாகும். பிஸ்லெரி நிறுவனம் 22 நவம்பர் 2025 அன்று மேல்முறையீடு செய்ததைத் தொடர்ந்து, எப்எஸ்எஸ்ஏஐ அந்த மாதிரியை மறுபரிசோதனைக்காக ஒரு பரிந்துரைக்கப்பட்ட ஆய்வகத்திற்கு அனுப்பியது. அந்த ஆய்வகத்தின் முடிவில், புரோமேட் அளவு அனுமதிக்கப்பட்ட வரம்பிற்குள் இருப்பது கண்டறியப்பட்டது; அதே சமயம், அந்த மாதிரியில் ‘பாலினியூக்ளியர் அரோமேட்டிக் ஹைட்ரோகார்பன்கள்’ இருப்பது சுட்டிக்காட்டப்பட்டது.
இந்த இரண்டு முடிவுகளுக்கு இடையே இருந்த வேறுபாடு, தெளிவுபடுத்தப்பட வேண்டிய ஒரு விஷயமாக பிஸ்லெரி கருதியது. இதனைத் தொடர்ந்து, அதே மாதிரியை எப்எஸ்எஸ்ஏஐ அங்கீகரிக்கப்பட்ட மற்றொரு ஆய்வகத்தில் பிஸ்லெரி நிறுவனம் சுதந்திரமாகப் பரிசோதனைக்கு உட்படுத்தியது. அந்தச் சோதனையிலும் புரோமேட் அளவு அனுமதிக்கப்பட்ட வரம்பிற்குள் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்தச் சுதந்திரமான பரிசோதனை முடிவுகளை, 2 பிப்ரவரி 2026 தேதியிட்ட அதிகாரப்பூர்வ கடிதத்துடன் எப்எஸ்எஸ்ஏஐ-ன் மேற்கு மண்டல அலுவலகத்திடம் சமர்ப்பித்தோம். அதன் பிறகு எப்எஸ்எஸ்ஏஐ.யிடமிருந்து எந்தத் தகவலும் கிடைக்காததால், இந்த விவகாரம் முடிவுக்கு வந்துவிட்டதாகவே நாங்கள் கருதினோம். இன்றுவரை, பிஸ்லெரி நிறுவனத்திற்கு மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது அச்சு வடிவிலோ எந்த அறிவிப்பாணையும் கிடைக்கவில்லை; மேலும், எப்எஸ்எஸ்ஏஐ இணையதளத்திலும் இது குறித்த எந்த அறிவிப்பும் காணப்படவில்லை. குடிநீர் பாதுகாப்பு என்பது பிஸ்லெரி நிறுவனத்தின் முதன்மையான முன்னுரிமையாகும். எங்களது 10-படிநிலை உற்பத்திச் செயல்பாட்டில், 90-க்கும் மேற்பட்ட கடுமையான தரக் கட்டுப்பாட்டுச் சோதனைகளை நாங்கள் மேற்கொள்கிறோம். இந்த விவகாரம் குறித்து, உரிய ஒழுங்குமுறை நடைமுறைகளின்படி எப்எஸ்எஸ்ஏஐயுடன் தொடர்ந்து ஒத்துழைப்போம். பல ஆண்டுகளாக நம்பிக்கைக்குரிய தண்ணீர் பிராண்டாகத் திகழும் பிஸ்லெரி, தொடர்ந்து குடிப்பதற்கு பாதுகாப்பானதாகவே உள்ளது” என பிஸ்லெரி நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *