கொளத்தூர், நவ. 19-
கொளத்தூர் தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபுவின் உடல்நலம் குறித்து சட்டப்பூர்வமாக, வெளியிடக்கூடிய தகவல்களை வெளியிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை கொளத்தூர் தொகுதி தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நலக் குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி முதல் அம்பத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது, உடல்நிலை குறித்து அலுவல் ரீதியான தகவல்களை வெளியிடக்கோரி கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட செம்பியத்தைச் சேர்ந்த ஜி.தேவராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், தனிப்பட்ட உரிமை, கண்ணியம், தனி நபரின் ரகசிய மருத்துவ ஆவணங்கள் ஆகியவற்றை வெளியிடும்படி கேட்கவில்லை என்றும், சட்டப்படி அனுமதிக்கப்பட்ட தகவல்களை வெளியிடக் கோரி நவம்பர் 5 மற்றும் 12-ஆம் தேதிகளில் அரசுக்கு மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவித்துள்ளார். கொளத்தூர் தொகுதி எம்எல்ஏ வி.எஸ்.பாபுவின் உடல்நிலை குறித்து, சட்டப்படி வெளியிடக்கூடிய தகவல்களை வெளியிட உத்தரவிட வேண்டும் என்றும், தொகுதி மக்களின் குறைகள், கோரிக்கைகள் இடையூறின்றி கவனிக்கப்படுவதை உறுதி செய்ய நிர்வாக ரீதியில் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது
தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நலம் குறித்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு
