சென்னை, நவ. 13-
த.வெ.க., அரசு பொறுப்பேற்று ஆறு மாதங்கள் முடிந்த நிலையில், அரசு அலுவலகங்களில் லஞ்சம், ஊழலை குறைக்க நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது. இது, மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற அதே நேரத்தில், விலைவாசி உயர்வு, மின்வெட்டு, கொலை சம்பவங்கள் அதிகரிப்பு போன்றவை, மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன.
மேலும், த.வெ.க., அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் சிலர், தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருகின்றனர். இந்நிலையில், த.வெ.க., – எம்.எல்.ஏ.,க்களை வளைத்து, ஆட்சியை கவிழ்க்க. தி.மு.க., – அ.தி.மு.க., தரப்பில் முயற்சி நடப்பதாக தகவல் வெளியானது. அதை தொடர்ந்து, எம்.எல்.ஏ.,க்களை அழைத்து பேச, முதல்வர் விஜய் திட்டமிட்டார். அதன்படி, மாமல்லபுரம் அடுத்த பேரூரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில், த.வெ.க., – எம்.எல்.ஏ.,க்களை, முதல்வர் விஜய் நேற்று மாலை சந்தித்தார். முன்னதாக, எம்.எல்.ஏ.,க்களுக்கு, மதிய உணவு வழங்கப்பட்டது. வேறு நிகழ்ச்சிகள் காரணமாக அமைச்சர் ஸ்ரீநாத், மெக்கா சென்றதால், எம்.எல்.ஏ., மதார் பதுருதீன், மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதால், கொளத்துார் எம்.எல்.ஏ., பாபு மற்றும் சபாநாயகர் பிரபாகர் ஆகியோர் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
டி.ஜி.பி., மகேஷ்குமார் அகர்வால், உளவுத்துறை ஐ.ஜி., அஸ்ரா கார்க் ஆகியோர் நேற்று முதல்வர் விஜயை தனியாக சந்தித்தனர். அப்போது, த.வெ.க., – எம்.எல்.ஏ.,க்களின் ஆறு மாத செயல்பாடு குறித்த அறிக்கையை வழங்கி உள்ளனர். அதில், அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., முன்னாள் அமைச்சர்களுடன், சில எம்.எல்.ஏ.,க்கள், தொடர்பில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
ஆட்டோக்களில் சுற்றிய எம்.எல்.ஏ.,க்கள் சிலர், தற்போது சொகுசு கார் வாங்கியிருப்பது பற்றியும் கூறப்பட்டுள்ளது. மேலும், நீர்வளம், ஊரக வளர்ச்சி துறை ஒப்பந்ததாரர்களிடம் சிலர், 10 சதவீத கமிஷன் கேட்பதோடு, பூஜை போடும்போதே, கமிஷன் தொகையில், 80 சதவீதத்தை வசூலிப்பதாகவும், சென்னையைச் சுற்றியுள்ள மாவட்ட எம்.எல்.ஏ.,க்கள், தொழிற்சாலைகளில் வசூல் வேட்டை நடத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அந்த எம்.எல்.ஏ.,க்களை, முதல்வர் விஜய் கடுமையாக எச்சரித்து உள்ளார்.
தவெக எம்.எல்.ஏ.க்கள் திமுகவுடன் கூட்டு:முதல்வர் விஜய்யை அதிர வைத்த உளவுத்துறை
