சென்னை, நவ. 25-
கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ விவகாரத்தில் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் கூறுகையில், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு சட்டமன்ற உறுப்பினர் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாகவோ, குடிபோதையில் அவரது இல்லத்திற்குச் சென்றதாகவோ கூறப்படும் சம்பவம் எதுவும் நடைபெறவில்லை. சமூக வலைதளங்களில் வந்த தகவலை அடிப்படையாகக் கொண்டு திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி கருத்து தெரிவித்தது கண்டிக்கத்தக்கது. சம்பந்தப்பட்டவர்களைத் தொடர்பு கொண்டு உண்மையைத் தெளிவுபடுத்திக் கொள்ளும் உரிமை அவருக்கு உள்ளது. இந்த விவகாரம் ஊடகங்களால் பெரிதுபடுத்தப்பட்டுத் தவறாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இது திமுக கிளப்பிவிட்ட திசைதிருப்பும் தந்திரம். சமூக ஊடகத்தில் யாரோ பரப்பியதை வைத்து எல்லோரும் அவர் மீது குற்றம்சுமத்துகிறார்கள். வதந்திகளுக்கெல்லாம் பதில சொல்லிக்கொண்டிருக்க முடியாது.
பள்ளிகல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன்: முதல்வர் விஜய் தலைமையிலான ஆட்சியில், குற்றம் சாட்டப்பட்டவர் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரி, எந்தப் பதவியில் இருந்தாலும் சரி, புகார்கள் குறித்து முழுமையான மற்றும் பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்படும். பாதிக்கப்பட்ட தரப்பிலிருந்து முறையான புகார் அளிக்கப்பட்டால், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும் பட்சத்தில் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல்களை அரசு ஒருபோதும் சகித்துக்கொள்ளாது. பாதிக்கப்பட்டவர்கள் தரப்பிலிருந்து முறையான புகார் அளிக்கப்பட்டால், யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அருண்ராஜ் கூறுகையில், மாவட்ட ஆட்சியருக்கு கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பவில்லை என்று அவர் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து அவர் விளக்கம் அளித்துவிட்டார். இதில் மேற்கொண்டு பேச ஏதுமில்லை என்று அவர் ஏற்கனவே கூறியிருந்தார். ஆனால், மாவட்ட ஆட்சியர் காவல் துறையில் புகார் அளித்த பிறகு நேற்று பேட்டி அளித்த அமைச்சர் அருண்ராஜ், ‘கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பற்றி நீதிபதி பேசிய விஷயங்கள் குறித்து நான் கருத்து சொல்ல முடியாது. அந்த நிகழ்வு குறித்து பலமுறை நான் ஏற்கெனவே பேசிவிட்டேன். கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரம் முதல்வரின் கவனத்தில் இருக்கிறது. இந்த விவகாரத்தில், ஆராய்ந்து உண்மை இருந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்’ என கூறினார். கடந்த ஜூலை 31ம் தேதி தனக்கு நடந்த சம்பவம் குறித்து தலைமைச் செயலாளர் சாய்குமாரிடம், கள்ளக்குறிச்சி பெண் கலெக்டர் புகார் அளித்துள்ளார். ஆனால் இந்தப் புகாரை அவர் உடனடியாக முதல்வர் விஜயின் கவனத்துக்கு கொண்டு சென்றாரா? அப்படி கொண்டு சென்றால், அதன் மீது நடவடிக்கை எடுக்க என்ன செய்தார்? கொண்டு செல்லாமவிட்டால், ஏன் கொண்டு கொள்ளவில்லை. கடந்த 4 மாதமாக புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்ைல என்றால் தலைமைச் செயலாளர் ஏன் அமைதியாக இருந்தார் என்ற கேள்வி எழுந்துள்ளது. பெண் கலெக்டர் புகார் மீது அவர் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அவர் தனது பதவி நீட்டிப்பை காப்பாற்றிக் கொள்வதற்காகவே, இந்த விவகாரத்தில் எம்எல்ஏவை தலைமைச் செயலாளர் காப்பாற்றியுள்ளாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதனால் அவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ விவகாரத்தில் முட்டுக்கொடுத்த அமைச்சர்கள்
