புதுடெல்லி, நவ. 15-
பிரதமர் மோடிக்கு எதிரான குற்றச்சாட்டு
களுக்கான ஆதாரங்கள் தனது செல்போனில் இருப்பதாகவும் மோடி அதனை ஒட்டுக் கேட்பதாகவும் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
இன்ஸ்டாகிராமில் நடைபெற்ற என்னிடம் கேளுங்கள் (ஆஸ்க் மி) நிகழ்ச்சியில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுலிடம் ஏராளமானவர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு ராகுல் காந்தி உடனுக்குடன் பதிலளித்தார். அப்போது, ஒன்றிய அமைச்சர்கள் அமித் ஷா, நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பாஜ தலைவர்கள் நாடாளுமன்றத்தில் விவாதிக்குமாறு அழைப்புவிடுக்கும் பட்சத்தில், பிரதமர் மோடியை ஏன் நேரடி விவாதத்துக்கு வரும்படி வலியுறுத்துகிறீர்கள் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த ராகுல் காந்தி, மக்களவையில் பேச அனுமதி மறுக்கப்படுகிறது.
எனது மைக் கூட அணைக்கப்படுகிறது. வேளாண் மசோதா, வாக்குத்திருட்டு, எஸ்ஐஆர் மற்றும் சீன விவகாரம், ஜெனரல் நரவானேவின் புத்தகம், எப்ஸ்டீன் என்று எது குறித்தும் அவர்கள் பேசவிடுவதில்லை. எனவே தான், நேருக்கு நேர் விவாதிக்க அழைக்கிறேன். நீண்ட உரைகளை உள்ளடக்கிய விவாதம் தேவையில்லை எனக் கூறினார். என் மீதான குற்றச்சாட்டுகளை நரேந்திர மோடி முன்வைக்கட்டும். நானும் அவர் மீதான குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறேன். அவர் வந்து மேடையின் ஒருபுறம் அமரட்டும். மறுபுறம் நான் இருப்பேன் எனக் கூறிய ராகுல், இதற்கு நடுவராக அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானியையோ அல்லது ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தையோ நியமித்தாலும் ஆட்சேபனையில்லை என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், தன்னுடனான நேருக்கு நேர் விவாதத்துக்கு பிறகு மோடி நிச்சயம் பிரதமராக நீடிக்கமாட்டார். மோடி மற்றும் அவரது அரசு தொடர்பான தனது குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்கள் தனது மொபைல்போனில் இருப்பதாகத் தெரிவித்த அவர், பிரதமர் மோடி அதனை ஒட்டு கேட்பதாகக் குற்றம் சாட்டினார். மேலும், அந்த மொபைல்போனில் யார் வெளிநாட்டு சக்திகளால் இயக்கப்படுகிறார், யார் தேசவிரோதி என்பதற்கான ஆதாரங்களும் இருப்பதாகக் கூறினார். இதனிடையே, ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், பிரதமர் மோடி தன்னுடன் நேரடி விவாதத்துக்கு வந்தால், அதன் பிறகு அவரது அரசியல் வாழ்க்கை அஸ்தமித்து விடும். இது அவருக்கும் தெரியும். எனக்கும் இது தெரியும்.
அவர் என்னை தேசவிரோதி என்றே கூறி வருகிறார். யார் தேசவிரோதி, யார் எப்போது இருந்து, எந்த வெளிநாட்டு சக்திகளால் இயக்கப்படுகிறார் என்பதில் உள்ள உண்மை என்னவென்று மோடிக்கு தெரியும் என்று குறிப்பிட்டார். மோடியின் மனதில் சிறிது பயம் இருப்பதால், சமீப காலமாக தன்னைப் பற்றி தாக்கி பேசுவதில்லை. தற்போது மிகுந்த கவனத்துடன் பேசுகிறார் எனக் கூறியுள்ளார். இந்தி மொழியில் வெளியிட்ட மற்றொரு பதிவில், மோடி தனக்கு ஆதரவான பத்திரிகையாளர்களுடன் நடத்திய தீபாவளி சந்திப்பு நிகழ்ச்சியின் போதும் டெலிபிராம்ப்டர் பயன்படுத்தினீர்கள்.
உங்கள் மக்கள், உங்கள் மேடை, அங்கிருந்த மொத்தமும் உங்களுடையது. அப்படி இருந்தும் உங்களுக்கு ஸ்கிரிப்ட் தேவைப்படுகிறது. அப்படியானால், நீங்கள் எந்தளவு அழுத்தத்திற்கு உள்ளாகி இருக்கிறீர்கள் என்று தெரிகிறது என்று ராகுல் பதிவிட்டுள்ளார். தன்னுடனான நேரடி விவாதத்துக்கு வரும் போதும் டெலிபிராம்ப்டர் கொண்டு வாருங்கள், பரவாயில்லை. உண்மையான துரோகி யார் என்று நாட்டு மக்கள் அறிய விரும்புகிறார்கள் எனவும் கூறியுள்ளார்.
பொய் சொல்வதையே வாடிக்கையாகக் கொண்டவர் ராகுல் – பாஜ கடும் தாக்கு
பிரதமர் தனது தொலைபேசியை ஒட்டுக் கேட்பதாக குற்றம்சாட்டிய ராகுலுக்கு பாஜ தேசிய செய்தித் தொடர்பாளர் துகின் சின்கா பதிலடி கொடுத்தார். அவர் தனியார் செய்தி நிறுவனமொன்றிற்கு அளித்த வீடியோ பேட்டியில், ராகுல் எந்தவொரு ஆதாரமும் இல்லாமல் அபத்தமாக குற்றம்சாட்டுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அவ்வப்போது புதிய குற்றச்சாட்டுகளை முன்வைப்பதும், பின்னர் அவற்றை நிரூபிக்க வேண்டியதன் அவசியத்தைக் கூட உணராமல் அதிலிருந்து பின்வாங்கும் அரசியலில் நம்பிக்கை கொண்டவர். தனது குற்றச்சாட்டிற்கான ஆதராங்களைக் கொடுக்க முடியாத பட்சத்தில், வேறொரு புதிய குற்றச்சாட்டைக் கூறி மக்களின் கவனத்தை திசை திருப்புவதே அவரது அரசியல் பாணி என்று குற்றம் சாட்டினார்.
சின்கா மேலும் கூறுகையில், அரசின் மூத்த அதிகாரிகள் தனக்கு அளிக்கும் தகவல்களின் அடிப்படையிலேயே குற்றம்சாட்டுவதாக ராகுல் கூறுகிறார். அப்படியானால், அவர் கூறிய முதல் குற்றச்சாட்டு உண்மையா அல்லது இரண்டாவதாக கூறும் புதிய குற்றச்சாட்டில் உண்மை உள்ளதா என்று கேள்வி எழுப்பினார். ராகுல் பொய் கூறுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். அவரால் ஒவ்வொரு நாளும் புதிய பொய்க்கதைகளை சொல்லாமல் அல்லது வதந்திகளை பரப்பாமல் வாழ முடியாது என்று கடுமையாக சாடியுள்ளார்.
தொடர்ந்து பேசிய சின்கா, வாக்குத் திருட்டு தொடர்பாக கடந்த மாதம் குடியரசுத் தலைவர் முர்முவை சந்தித்த போது ஆதாரங்களை சமர்ப்பிக்காத ராகுல், மீண்டும் அவரை அணுகவோ அல்லது சந்திக்க நேரம் ஒதுக்கவோ கோரவில்லை. ஆனால், தற்போது தன்னுடைய மொபைல்போனில் அனைத்து ஆதாரங்களும் உள்ளன. அதனால், அவரது போன் ஒட்டு கேட்கப்படுவதாக கூறுகிறார். ராகுல் காந்தி வளர்ச்சி அடைய வேண்டும். அவர் மாயை
யால் பாதிக்கப்பட்டிரு
ந்தால், மருத்துவ உதவியை நாடவும் என்று அந்த வீடியோவில் அறிவுறுத்தி
யுள்ளார்.
எனது செல்போனை பிரதமர் மோடி ஒட்டுக் கேட்கிறார்: மோடி மீது ராகுல் பகிரங்க குற்றச்சாட்டு
