“கும்பகர்ணன் போல் தவெக அரசு தூங்கிக் கொண்டிருக்கிறது” கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி

  • சேலம், நவ. 13-
  • முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, தவெக அரசையும் முதல்வர் விஜய்யையும் கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார். இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், ‘தவெக ஆட்சி அமைத்து 6 மாத காலம் நிறைவு பெற்றுவிட்டது. அக்கட்சியின் தலைவர், தேர்தல் நேரத்தில் பல வாக்குறுதிகள் அளித்தார். அந்த வாக்குறுதிகளில் சில வாக்குறுதிகள் தான் நிறைவேற்றி இருக்கிறார், பெரும்பாலான வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. முதல்வர் விஜய் எந்த ஒரு பெரிய திட்டத்தையும் இதுவரையும் அறிவிக்கவில்லை. இந்த அரசாங்கம் ரீல்ஸ், ரீல் நம்பியே ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. மக்களுக்கு தேவையான திட்டங்கள், அதற்கு தேவையான நிதி இதுவரை ஒதுக்கப்படவில்லை. தமிழகத்தில் சட்ட ஒழுங்கு அடியோடு சீர் கெட்டுவிட்டது. ஆனால் இந்த அரசு கும்பகர்ணன் போல் தூங்கிக் கொண்டிருக்கின்ற காரணத்தால் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே கொலை சம்பவங்கள் நடந்தேறிக் கொண்டிருக்கின்றன. அதை தடுக்க திராணியற்ற அரசாக இந்த அரசு இருக்கிறது. அதோடு கிராமத்திலிருந்து நகரம் வரை அமோகமாக போதை பொருள் விற்பனை நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக கஞ்சா போதை ஆசாமிகளால் தான் கொலை, கொள்ளை, திருட்டு வழிப்பறி, பாலியல் சீண்டல் அதிகரித்து இருக்கிறது. இந்த கஞ்சா விற்பனையை இந்த அரசால் தடுக்க முடியவில்லை. அதோடு எடப்பாடி நகரத்தில் அண்மையில் லாட்டரி சீட் அதிகமாக விற்பனை செய்வதாக நிர்வாகிகள் தெரிவித்தார்கள், பொதுமக்கள் தெரிவிக்கின்றார்கள். ஆகவே இந்த அரசு, காவல்துறை இப்படி ஒரு லாட்டரி சீட்டு விற்பனை செய்வதை நிறுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
  • முதல்வர் பத்திரிகையாளர்களையும் சந்திப்பதில்லை, ஊடகத்தையும் சந்திப்பதில்லை. ஒரு அரசு செயல்படுகின்றதா? இல்லையா? என்று கூட மக்களுக்கு தெரியாத அளவுக்கு தவெக ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி கர்நாடகாவிடம் இருந்து போதிய காவிரி நீரை நமக்கு பெற்று தர இந்த அரசு தவறிவிட்டது. அதனால் நம்முடைய விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள், விலையேற்றமும் இருக்கிறது. 6 மாதத்தில் சிறப்பான ஆட்சியை கொடுப்போம் என பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சட்டமன்றத்தில் தெரிவித்டார். ஆனால், அவர்கள் சிறப்பான ஆட்சியை கொடுக்கவில்லை, துயரமான ஆட்சியைத் தான் நாட்டு மக்களுக்கு கொடுத்திருக்கிறார்கள். எங்கே பார்த்தாலும் கொலை நடக்கிறது. ஒரு அரசாங்கம் இப்படிப்பட்ட சமூகத்தை தடுத்து நிறுத்த வேண்டும். அதற்குதான் உங்களுக்கு ஆட்சி பொறுப்பை கொடுத்திருக்கிறார்கள். ஆட்சி அமைந்த பிறகு சட்ட ஒழுங்கை பாதுகாக்க வேண்டியது அரசுடைய கடமை. கொலை நிலவரத்தை கட்டுப்படுத்த வேண்டும், கொலை நடக்காமல் பார்த்து கொள்ள வேண்டும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என ஆவேசமாகப் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *