மதுரை, நவ.4-
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தனியார் நிறுவனத்தின் ஒப்பந்தப் பணியாளர்கள் 750-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.
இவர்கள் ஊதிய உயர்வு, வார விடுமுறை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த அக்டோபரில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், மன் அருள் சுந்தரேசkumar தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், அவர்களுக்கு ஊதிய உயர்வு, வார விடுமுறை வழங்குவது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அனைவருக்கும் ஊதிய விவரச் சீட்டு வழங்கப்படும், பிடித்தம் செய்யப்படும் பணம் குறித்த விவரம் தெரிவிக்கப்படும், நாள்தோறும் 8 மணி நேர வேலை மட்டுமே வழங்கப்படும் எனக் கூறப்பட்டது.
ஆனால், இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால், நேற்று திடீர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் மனு அளித்தனர்.
இது தொடர்பாக அவர்கள் கூறியதாவது:
அரசு மருத்துவமனையில் தூய்மைப் பணிக்காகத்தான் நியமிக்கப்பட்டோம். ஆனால், எங்களை அழுக்குத் துணிகளை துவைக்க கொண்டு செல்வது, கையெழுத்து வாங்கி வருவது, குளுக்கோஸ், மருந்து உள்ளிட்டவை வாங்கி வருவது உள்ளிட்ட அனைத்து பணிகளிலும் ஈடுபடுத்துகின்றனர். சாப்பிடுவதற்குக்கூட நேரம் இன்றி பணியாற்றுகிறோம். ஒருநாள் விடுப்பு எடுத்தாலும் ஊதியத்தில் பிடித்தம் செய்கின்றனர். விடுப்பு கிடைப்பது சிரமமாக உள்ளது. எங்களுக்கு நாள்தோறும் நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் ரூ.710-ஐ முழுமையாக தர வேண்டும். தீபாவளி பண்டிகைக்காக எங்கள் ஊதியத்தில் இருந்து ரூ.10 ஆயிரம் முன்பணமாக வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். இல்லாவிட்டால் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கூறினர்.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தனியார் நிறுவன ஒப்பந்தப் பணியாளர்கள் வேலைநிறுத்தம்
