மதுரை, நவ.3-
தீபாவளி பண்டிகைக்கு ஒரு வாரமே உள்ள நிலையில் புத்தாடைகள், இனிப்புகள் உள்ளிட்டவை வாங்க நேற்று பல ஆயிரம் பேர் திரண்டதால் மாசி வீதிகள் ஸ்தம்பித்தன.
தீபாவளி பண்டிகை வரும் 8-ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதற்கு ஆயத்தமாக, மதுரையில் மாசி வீதிகள், விளக்குத்தூண், பத்துக்குான், மஞ்சணக்காரத்தெரு, கீழ்வெளி வீதி உள்ளிட்ட பகுதிகளில் தீபாவளி விற்பனை களை கட்டி வருகிறது.
புத்தாடைகள், வீட்டு உபயோக பொருட்கள்வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால், மக்கள் குடும்பம் குடும்பமாக வந்து பொருட்களை வாங்கிச் சென்றனர். முக்கிய கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
மதுரை மட்டுமல்லாமல் தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் மக்கள் புத்தாடைகள், இனிப்புகள், பட்டாசுகள் உள்ளிட்ட பொருட்களை வாங்குவதற்கு வருகின்றனர். பெரிய கடைகள் மட்டுமல்லாமல் சிறிய கடைகளிலும் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
ஆடைகளில் புதிய வரவுகள் அதிகம் இருந்ததாகவும், ஆனால் விலை கடந்த ஆண்டை விட அதிகமாக உள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர். கடந்த சில நாட்களாக மழை இல்லாத நிலையில் சாலையோர வியாபாரிகளுக்கு நல்ல விற்பனை இருப்பதாக தெரிவித்தனர். மாநகர் காவல் ஆணையர் ராஜேந்திரன் உத்தரவின்பேரில், 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 20-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டு, 100-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் மூலம் போலீசார் கூட்டத்தை தீவிரமாக கண்காணித்தனர்.
மதுரை மாசி வீதிகளில் அலை மோதிய மக்கள் கூட்டம்
