மீனாட்சி அம்மன் கோவில் பசுமடம் மூடப்பட்டுள்ளதால்சுவாமிகளுக்கு பாக்கெட் பாலில் அபிஷேகம்பக்தர்கள் கண்டனம்


மதுரை, நவ.3-
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பசுமடம் பூட்டப்பட்டுள்ளதால் அம்மனுக்கும், சுவாமிக்கும் பாக்கெட் பாலில் அபிஷேகம் நடைபெறுவதாக இந்து மக்கள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. கட்சியின் மதுரை மாவட்டத் தலைவர் சோலைக்கண்ணன் கூறியதாவது:
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மேற்கு ஆடி வீதியில் 50 ஆண்டுகளாக கோயில் நிர்வாகத்தின் பசுமடம் செயல்பட்டு வந்தது. அங்கு 10-க்கும் மேற்பட்ட பசுக்கள் பராமரிக்கப்பட்டன. மீனாட்சி அம்மனுக்கும், சுந்தரேசுவரப் பெருமானுக்கும் 5 கால பூஜையின் அபிஷேகத்துக்கு பசு மடத்தில் இருந்துதான் பால் அனுப்பப்பட்டது. இந்நிலையில், கோயில் அதிகாரிகளின் உத்தரவின்பேரில், சுவாமி வீதி உலாவின்போது கொட்டுடன் செல்லும் மாடும், கோமாதா பூஜைக்கான மாடும் தவிர, பசுமடத்தில் இருந்த மற்ற 10-க்கும் மேற்பட்ட பசுக்கள் வாகனங்களில் ஏற்றப்பட்டு பண்ணைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதனால், மீனாட்சி, சுந்தரேசுவரருக்கு நடைபெறும் அபிஷேகத்துக்கு பசு மடத்தில் பால் வாங்குவதற்குப் பதிலாக, வெளியில் இருந்து பாக்கெட் பால் விலைக்கு வாங்கப்படுகிறது. பசுமடம் இல்லாததால், அகத்திக் கீரைக் கட்டுகளுடன் வரும் பக்தர்களும் ஏமாற்றம் அடைகின்றனர். மீனாட்சி அம்மன் கோயிலில் பசு மடம் பூட்டப்பட்டது, பசுக்கள் மடத்திலிருந்து வெளியேற்றப்பட்டது இதுவே முதல்முறை. பசு மடத்தில் உள்ள பசுக்களை எதற்காக, என்ன காரணத்துக்காக பண்ணைக்குக் கொண்டு சென்றனர், ஏன் பசு மடம் பூட்டப்பட்டது என கோயில் நிர்வாகம் விளக்கம் அளிக்க வேண்டும். பசு மடமும், பசுக்களும் இருந்தால் கோயிலுக்குப் பெருமை. எனவே, மீனாட்சி அம்மன் கோயிலில் பூட்டிக் கிடக்கும் பசு மடத்தைத் திறந்து, பண்ணைக்கு அனுப்பப்பட்ட பசுக்களை மீண்டும் பசு மடத்துக்கு அழைத்து வந்து பராமரிக்கவும், இங்கிருந்து பெறப்படும் பால் மூலமாகவே சுவாமிகளுக்கு அபிஷேகம் செய்யவும் கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *