மதுரை, அக். 27-
‘’மதுரையில் ‘டெட்’ தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் உண்மைத் தன்மை சான்று கேட்டு தினமும் சி.இ.ஓ., அலுவலகம் சென்றுவர வேண்டியுள்ளது’’ என புலம்புகின்றனர்.
அரசு, உதவி பெறும் பள்ளிகளில் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கு ‘டெட்’ தேர்ச்சி கட்டாயம். 2012 முதல் ‘டெட்’ தேர்வு நடத்தப்படுகிறது. தேர்ச்சி பெறாத, பணியில் உள்ள ஆசிரியரும் எழுதுகின்றனர். 2025 ல் நடந்த தேர்வில், பணியில் உள்ள ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் உட்பட 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மதுரையில் தேர்ச்சி பெற்றனர்.
தேர்ச்சி சான்றை டி.ஆர்.பி., இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, அச்சான்றின் உண்மைத் தன்மை சான்று கோரி சி.இ.ஓ., அலுவலகத்தில் விண்ணப்பித்தனர். இச்சான்று கிடைத்தால் தான் ‘டெட்’ தேர்ச்சியை ஆசிரியரின் பணிப்பதிவேட்டில் (எஸ்.ஆர்.,) பதிவு செய்ய முடியும். இப்பதிவுக்கு பின்பு தான் ஆசிரியருக்கு பதவி உயர்வு, பணப் பலன் கிடைக்கும். ஆனால் 2025 ல் தேர்ச்சி பெற்ற பலருக்கு இன்னும் உண்மைத் தன்மைச் சான்று கிடைக்கவில்லை என ஆசிரியர்கள் புலம்புகின்றனர்.
அவர்கள் கூறியதாவது: சி.இ.ஓ., தயாளன் பல்வேறு பிரச்னைகளுக்கு நடவடிக்கை எடுக்கிறார். இப்பிரச்னை குறித்தும் வலியுறுத்தியுள்ளோம். சம்பந்தப்பட்ட அலுவலக பிரிவு ‘மந்தமாக’ செயல்படுகிறது. ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு காரணத்தை கூறி ‘சரி செய்து நாளைக்கு வாங்க’ என திருப்பி அனுப்புகின்றனர்.
பலருக்கு இன்னும் சான்று கிடைக்கவில்லை. வெளி மாவட்ட ஆசிரியர்கள் மதுரையில் ‘டெட்’ எழுதியிருந்தால் அவர்களுக்கும் இங்கு தான் அந்தச் சான்று வழங்க வேண்டும். அவசியம் கருதி சி.இ.ஓ., தயாளன் இவ்வகை சான்று வழங்க சிறப்பு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றனர்.
நாள்தோறும் அலைக்கழிக்கப்படும்டெட் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள்
