திமுக கூட்டணியில் மனிதநேய ஜனநாயக கட்சி தொடர்ந்து பயணிக்கும் – அன்சாரி திட்டவட்டம்


சென்னை, அக். 27-
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர் அன்சாரி சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுகவுடனான கூட்டணி, தமிழக அரசியல் சூழல், சிறுபான்மை மக்களின் ஆதரவு மற்றும் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் தொடர்பான விவகாரங்கள் குறித்து தனது கருத்துகளைத் தெரிவித்தார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினைத் தோழமை மற்றும் நட்பு அடிப்படையில் சந்தித்ததாகத் தெரிவித்த அன்சாரி, இந்தச் சந்திப்பு தேர்தலை மட்டும் மையமாகக் கொண்டதல்ல என்று கூறினார். சுமார் அரை மணி நேரம் நடைபெற்ற சந்திப்பில் பல்வேறு அரசியல் விவகாரங்கள் குறித்தும், அடுத்த தலைமுறையினரின் நலனைக் காக்க வேண்டிய பணிகள் குறித்தும் ஆலோசித்ததாகத் தெரிவித்தார். மனிதநேய ஜனநாயக கட்சி தமிழகத்தில் மேற்கொண்டு வரும் பல்வேறு பணிகளை மு.க.ஸ்டாலின் பாராட்டியதாகவும் அன்சாரி குறிப்பிட்டார்.
மனிதநேய ஜனநாயக கட்சி தொடர்ந்து திமுக கூட்டணியில் பயணிக்கும் என்று அன்சாரி திட்டவட்டமாகத் தெரிவித்தார். திமுக கூட்டணி ஜனநாயக அடிப்படையில் செயல்படுவதாகவும், அதில் இடம்பெற்றுள்ள தோழமைக் கட்சிகளுக்கு உரிய மதிப்பளிக்கப்படுவதாகவும் அவர் கூறினார். தமிழகத்திற்கு ஆற்ற வேண்டிய பல்வேறு பணிகளில் மனிதநேய ஜனநாயக கட்சி தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், சமூகத்தின் எதிர்கால நலன் சார்ந்த விஷயங்களில் கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து செயல்படுவது அவசியம் என்றும் தெரிவித்தார்.
தாராபுரம் மற்றும் மதுராந்தகம் இடைத்தேர்தல்களில் சிறுபான்மை மக்களின் வாக்குகள் திமுகவுக்குக் கிடைத்ததாகக் குறிப்பிட்ட அன்சாரி, சிறுபான்மை சமூக மக்கள் பாசிசத்தை வீழ்த்தக்கூடிய வலிமையான அணியாகத் திமுக கூட்டணியைப் பார்ப்பதாகத் தெரிவித்தார்.
பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த மக்கள் திமுக கூட்டணிக்கு ஆதரவளிப்பார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். திமுக எப்போதும் நீதியின் பக்கம் நிற்பதாகவும், அந்தக் கட்சியின் மீது பழி சுமத்தும் நோக்கில் சிலர் விஷமக் கருத்துகளைப் பரப்பி வருவதாகவும் குற்றம்சாட்டினார். தமிழக மக்கள் ஒற்றுமையையும் அமைதியையும் விரும்புபவர்கள் என்று தெரிவித்த அன்சாரி, மதுரையைச் சேர்ந்த மக்களும் அமைதியையே விரும்புவதாகக் கூறினார்.
இதுதொடர்பாகத் திமுகவின் நிலைப்பாட்டைத் தவெக அரசு பின்பற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
தமிழகத்தில் அமைதியும் மத நல்லிணக்கமும் நிலவ வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், ஆர்.எஸ்.எஸ். ஊர்வலங்களை நடத்துவதன் மூலம் மதப் பதற்றத்தை உருவாக்கச் சிலர் முயற்சிப்பதாகக் குற்றம்சாட்டினார். தென்னிந்தியாவில் பாஜகவின் அரசியல் செல்வாக்கிலிருந்து மக்கள் விலகி வருவதாகக் கருத்துத் தெரிவித்த அன்சாரி, தமிழக மக்கள் அரசியல் விவகாரங்களில் மிகவும் விழிப்புடன் இருப்பதாகக் கூறினார். தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலங்களை நடத்த அனுமதிக்கக் கூடாது என்று தெரிவித்த அவர், இந்த விவகாரத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் அரசு தரப்பில் உரிய வாதங்களை முன்வைத்திருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
மு.க.ஸ்டாலினுடனான சந்திப்பைத் தொடர்ந்து, திமுக கூட்டணியில் தொடர்ந்து நீடிப்பதாக அன்சாரி அளித்துள்ள உறுதியும், ஆர்.எஸ்.எஸ். ஊர்வல விவகாரத்தில் விஜய் அரசுக்கு விடுத்துள்ள கோரிக்கையும் தமிழக அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *