சென்னை, அக்.25-
நாதக வேட்பாளர் கார்த்திகாவின் விடுதலைக்கு குரல் கொடுத்த அனைத்து தலைவர்களுக்கும் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நன்றி தெரிவித்து கொண்டுள்ளார். இது தொடர்பாக “பாஜக மாடல் தவெக அரசுக்கு எதிராக ஒன்றிணைந்த அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுகளும் நன்றிகளும்” என்று தலைப்பிட்டு சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். அந்த அறிக்கையில் சீமான் கூறி உள்ளதாவது;
டெல்லியின் பாஜக அரசுபோல் தமிழக அரசால் பொய் வழக்கு புனையப்பட்டு அநீதியாகக் கைது செய்யப்பட்ட நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் தங்கை கார்த்திகா, நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தம்பி இசை மதிவாணன் உள்ளிட்ட பன்னிரண்டு உறவுகளின் விடுதலைக்காகக் குரல் கொடுத்த அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக, சட்டப் போராட்டத்தை முன்னெடுத்து வெற்றிகரமாகச் சாதித்துக் காட்டிய நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் பாசறையைச் சேர்ந்த உறவுகளுக்கு எனது உளமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் பணிகளைச் சிறப்பாக ஒருங்கிணைத்த நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் தம்பி மணிசெந்தில், நாம் தமிழர் கட்சியின் தலைமையகச் செயலாளர் வழக்கறிஞர் தம்பி செந்தில்குமார் உள்ளிட்ட அனைத்து வழக்கறிஞர் பெருமக்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளையும் புரட்சிகர வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
“பாஜக மாடல் தவெக அரசு”-க்கு எதிரான உரிமைப் போராட்டங்கள் வெல்லட்டும்
