வைகையில் மணல் திருட்டு: கண்டு கொள்ளாத கனிம வளத்துறை

திருப்புவனம், நவ. 22-
திருப்புவனம் வைகை ஆற்று படுகையில் மணல் திருட்டால் மெகா பள்ளங்கள் உருவாகி பாலைவனமாக மாறியுள்ள காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வருஷநாடு மலைப்பகுதியில் உற்பத்தியாகும் வைகை ஆறு தேனி, திண்டுக்கல், மதுரை ,சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் குடிநீர் மற்றும் பாசன தேவையை பூர்த்தி செய்கிறது. வைகை ஆற்று பாசனத்தை நம்பி திருப்புவனம் தாலுகாவில் 4 ஆயிரம் எக்டேர் நிலங்களில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பரில் நெல் விவசாயம் நடைபெறுகிறது. தொடர்ந்து வைகை ஆற்றில் மணல் திருட்டு நடைபெறுவதால் கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விவசாயம் குறைந்து வருகிறது.
போதிய மழை இல்லாதாலும் வைகை ஆற்றில் நீர்வரத்து இல்லாததாலும் ஆற்றில் பாதை அமைத்து மணல் திருட்டு வெகு ஜோராக நடந்து வருகிறது. ஆற்றினுள் வாகனங்கள் செல்ல மரங்களால் ஆன பாதை அமைத்து அதன் வழியாக இரவு நேரத்தில் மணல் அள்ளி விற்பனை செய்கின்றனர். மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டத்தின் கட்டுமான தேவையை வைகை ஆற்று மணல் தான் பூர்த்தி செய்கிறது. மணல் குவாரிகள் ஏதும் இல்லாத நிலையில் திருட்டு மணலை நம்பியே கட்டுமான பணிகள் நடைபெறு
கின்றன.
வைகை ஆற்றை ஒட்டி குடியிருக்கும் சிலர் தோப்புகளின் வழியாக பாதை அமைத்து மணல் திருட்டில் ஈடுபட்டு வருகின்றனர். பல இடங்களில் குவியல் குவியலாக மணலை குவித்து வைத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மணல் திருட்டை தடுக்க இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. லாடனேந்தல் தொடங்கி திருப்பாச்சேத்தி வரை வைகை ஆறு பாலைவனமாக காட்சியளிக்கிறது. மணல் திருட்டு நடக்கும் இடங்களுக்கு போலீசாரோ மற்ற அதிகாரிகளோ செல்ல கூட முடிவதில்லை.
பட்டா நிலங்கள் வழியாக பாதை அமைத்து மணல் கடத்தல் நடந்து வருகிறது. மணல் கடத்தலை தடுக்காவிட்டால் விவசாயமே கேள்விக்குறியாகிவிடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *